> >

Friday, April 29, 2011

தீர்ப்பெனும் மணற்கயிறு

என் தேசம் விற்பனைக்கோ
என்ற கவலை
அந்நிய முதலீடும்
ஆளும் வர்க்க
அக்டோபஸ் கைகளும்
சங்கமித்த இந்நேரம்

வளர்ச்சிப் பாதைக்கு
வித்திடுகிறார்களாம்
வின்வெளியில்
அப்பொழுதானே
கணக்கைக் காற்றில்
எழுதலாம்
கனவுகளில் தூசி தட்டலாம்

பங்கு பிரிப்பதிலும்
நுங்கு தின்பதிலும்
அவர்களுக்கு நிகர்
அவர்களே.
அங்கே இவர்களுக்கு
நிறபேதமில்லை
இலக்க பேதங்களைத்
தவிர

பூக்களின் குவியல்
பறிப்பவனுக்கு
சொந்தமில்லை

இமயமலைச் சாரல்
இதமான சூழல்
வற்றா ஜீவநதிகள்
வற்றிய வாழ்க்கை
நிரம்பா வயிறும்
நித்திய சோகமுமாய்
நகரும் நாட்கள்

எங்கு நோக்கினும்
சடலம்
இதயம் கனக்கும்
அவலம்
இது தானா
என் தேசத்தின்
ஒற்றுமைப்
படலம்

உண்ண உணவில்லை
உடுத்தவோ உடையில்லை
எத்தனை நாட்கள்
தின்பது நிலாச்சோறு
தானமானது வியர்வைத்
துளிகள்
சொந்தமானது சோகச்
சுமைகள்
எத்தனை நாட்கள்
பசிக்கடலில்
பட்டினி சவாரி

கர்வத்தின்
உச்சியில்
வாழ்பவர்களே
சற்று வீழ்ச்சியின்
ஆழத்தையும்
நினைவில்
வையுங்கள்.

ஓடிய நரிகள்
வேதம் ஓதின
ஓடும் நரிகளும்
அரிதாரம் பூசுகின்றன.
நடந்ததும் நடப்பதும்
மறக்கடிக்கவா
இந்த நாடகம்

ஐந்தாண்டுகள்
திட்டமிட்டுத்
தீட்டப்படும்
திட்டங்கள்
எல்லாம்
தங்களின் பை
நிறப்பத்தானோ

எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
உத்வேகம் கிளப்பும்
புதிய பெருச்சாலி
சுனாமியை மிஞ்சும
பெரும் சூராவளி.

கூட்டுக் களவாணிகளால்
கப்பல் ஏறும்
இந்தியாவின் மானம்
அரியணை
ஏறத்துடிக்கும்
அரசியல்வாதிகளால்
அவமானம்


இவர்கள்
அதிகார கமண்டலத்தை
தூக்கித்திரியும்
அரசியல் ஆண்டிகள்

வாழ்த்தவோ
இல்லை
வீழ்த்தவோ
துருப்புச் சீட்டாய்
வருகின்றத் தேர்தல்


பணநாயகம்
பந்தி விரித்தால்
பாமரனின்
பசி ஆற்றுமா

வழக்குகள்
வழக்கத்தைவிட
வேகமெடுக்கும்
கடைசியில்
வசப்பட்டு
கரைபடியும்

குரங்கு பங்கிட்ட
அப்பமாய்
தீர்ப்புகளும்
மடைமாறும்

குஜராத்
கொடுமைளுக்கே
நீதிக்கு விழிப்பில்லை
பின் யாருக்கு வேண்டும்
தீர்ப்பு எனும்
மணல் கயிறு..

Friday, April 8, 2011

அறிந்த வேளையில் மனது

நண்பா நீ தப்பா நினைக்கலன்னா நான் ஒன்னு சொல்லலாமுன்னு இருக்கேன் என்று அருகில் வந்தான் வில்சன்
-எம்மதமும் சம்மதமுன்னு சொல்லாதவரையில் நான் தப்பா எடுத்துக்கமாட்டேன் என்றான இம்ரான்
-அதுல தான எனக்கு புது டவுட் உன்னைப் பத்தி எனக்கு தெரியும் இல்லையா அதனால தான் முதல்லயே உன்கிட்ட பர்மிஷன் கேக்குறேன் என்றான் வில்சன்
-என்ன டவுட்
-இப்போ நீ வழிபடுற இஸ்லாத்தையும் நான் வணங்குகின்ற கிருஸ்தவத்தையும் கொஞ்ச நேரம் மறந்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் கொஞ்ச நேரம் பேசலாமா
-சும்மா நாம விவாதிக்குறதுக்கு ஏன் நம்மலோட மதத்தை கைவிடனும் என்றான் இம்ரான்

-எதுக்குச் சொல்றேன்னா சில நேரத்துல உன் மதத்தைப் பற்றியோ இல்லைன்னா என் மதத்தைப் பற்றியோ விமர்ச்சிக்க வேண்டிவரும் அப்போ நம்ம மனசு வருந்தக்கூடாது இல்லயா அதனாஈல தான் என்றான் வில்சன்
-சரி அப்படீன்னா இது பத்தி உன் மதத்திலையோ இல்லைன்னா உங்க பாதிரியார்களோ
விளக்கிஇருக்காங்களா என்றான் இம்ரான்
அப்படி விளக்கினதா இதுவரை எனக்குத் தெரியல அது இருக்கட் டும் உங்க வேதமோ இல்லன்னா உங்க முல்லாக்களோ இது பத்தி விளக்கி இருக்காங்களா என்றான் வில்சன்
-எங்க முல்லாக்கள் என்று சொல்றதவிட எங்க வேதம் இதபத்தி விளக்கம் இருக்கா இல்லன்னா எங்க நபி இது சம்பந்தமா சொல்லி இருக்காங்களான்னு தான் முதல்ல பார்ப்போம் என்றான் இம்ரான்
-ஏன் இப்படி ஒரு குருட்டு பகதி என்றான் வில்சன்
-இதுக்குப் பேரு குருட்டு பக்தி இல்ல இதை நான் ஒரு வழிக்காட்டல்ன்னு நான் நினைக்கிறேன். இன்னிக்கு உன் வாழ்க்கைக்கு ஒரு ரோல் மாடலை உன் வாழ்க்கைக்கு உந்து சக்தியா எடுத்திருக்கே இல்லயா சரியா சொல்லனும்னா உன் பெட்டுக்கு மேல ஒட்டி இருக்குற, இந்தப் படத்தைப் பார்த்த உடனேயே ஒரு நடிகன் தான் உன் ரோல் மாடல்னு தேரிஞ்சிக்க அதிகம் நேரம் ஆகாது
-ஆமாம் ஹீ ஈஸ் டேலண்ட் பெர்சன் அவரோட நடை உடை பாவனை பேச்சு கம்பீரம் ஸ்டைல் எல்லாம் எனக்கு பிடிச்சிருந்த து அதனால தான் அவர என் ரோல் மாடலாக நினைக்கிறேன்.
-இப்போ சொல்றியே இதுக்குப் பேறுதான் குருட்டு பகதிங்கிறது. வழிக்காட்டலுக்கும் கேரக்டருக்கும் இடையில் எத்தனைப் பெரிய வேறுபாடு இருக்குத் தெரியுமா நீ ரோல் மாடலாக நினைக்கிறதுக்கு இதுமட்டும் காரணமில்லைன்னு நான் நினைக் கிறேன்
-என்ன திருப்பி அடிக்கிறியா என்றான் வில்சன்
எதார்த்தத்தைச் சொன்னா அதுக்குப் பேரு திருப்பி அடிக்கிறது இல்ல.
-அவர பலரோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் பிடிச்சிருந்தது. அவ்வளவு தான் .
-பொய் சொல்லாதே அவர் ஒரு காதல் இளவரசன் அப்படீங்கிறதும் உன் மனசுல பதிஞ்சிருக்கிறதும் ஒரு காரணம்
-அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்
-என்ன இருக்கலாம் இது தான் உன் உள் மனசுல இருக்கிற உண்மை
சரி அதுக்கு என்ன இப்போ என்றான் வில்சன்
-உலக வாழ்க்கையில நீ முன்னேறுறதுக்கு இவர் என்ன உபதேசம் உனக்கு செஞ்சிருக்கார்
-நல்லா உழை வாழ்க்கையில் முன்னேறு உன் குடும்பத்தை கவனி அதன் பிறகு எங்களைப் பார் என்று சொல்லி இருக்கார் இவரைப் போல யாரும் சொல்லி இருக்காங்களா என்ன?
-இவர் என்னவோ பெரிய தத்துவத்தை சொன்னது போலவும் இதுக்கு முன்னாடி யாரும் சொல்லவே இல்லை என்கிறது போலவும் சொல்றியே உனக்கு வெட்கமா இல்லை.
-என்னடா இப்படி கேட்கிறே
-பின்ன என்ன இத உன் அப்பா எத்தனைத் தடவை உன் கிட்ட சொல்லி இருப்பார் அப்ப உன் மனசுல ஏறல உன்காதுலயும் விழல ஆன உன் ரோல் மாடல் சொன்னதும் உனக்கு மனசுல பதியிதுன்னா சினிமா எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்குன்னு தெரியிது.
இப்ப என்ன சொல்ல வர்ரே என்றான் வில்சன்
-படிக்காத பாமரன் இதைச் சொன்னான்னா அத அவனோட அறியாமைன்னு விட்டுடலாம் ஆன கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச நீ யே இப்படி இருந்தாக்கா மற்றவங்க எப்படி இருப்பாங்க
-நீ சொலறது புரியில என்றான் வில்சன்
அரிதாரம் கலைக்கிறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் இவர்களோட நடவடிக்கைகளைப் பத்தி என்னைக்காவது சிந்தித்து பார்த்திருக்கிறியா என்றான் இம்ரான்
-ஏன் அவங்களோட பர்சனல் பிரைவசியில தலையிடனும்
-பின்ன எதைப் பார்த்து அவங்கள ரோல் மாடலா எடுத்தே
அவரோட பத்திரிக்கைப் பேட்டி கட்டுரை இவைகளப் பார்த்து தான்
-கேமிரா முன்னால இயக்கப்படுற ஒரு ஆள் உனக்கு ரோல் மாடல்ன்னா உலகத்துல கோடிக்கணக்கானவங்க பின்னபற்றுற ஏசுவோ இல்லைன்னா முஹம்மது நபியோ உன் பார்வைக்கு வரல இல்லையா என்றான் இம்ரான்
-அது மதம் இது உலக வாழ்க்கை என்றான் வில்சன்
-சரி உன் ரோல் மாடல் உலகவாழ்க்கையில தான் சொன்னத செஞ்சிருக்காரா என்றான் இம்ரான்
-எதைச் சொல்லிட்டு செய்யல
கும்பகோணம் என்கிற ஊருல ஒரு பள்ளிக்கூடம் தீப்பிடிச்சு எரிஞ்சுப் போச்சு அதுல சிக்கி கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் கருகி இறந்து போயிடுச்சு. மனிதாபிமானம் எனகிற அடிப்படை யில் உன்னோட ரோல் மாடல் வந்தார் ஆறுதல் சொன்னார் அப்புறம் உதவிகளைச் செய்யிறதா பத்திரிக்கைகள்ல அறிவிப்பு செஞ்சார் ஆனா இந்த உதவி இதுவரைக்கும் கிடைக்கலியே இது இந்திய அரசாங்கத்துக்கு கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யிறதுக்காக சொன்ன வாரத்தையோன்னு மக்கள் பேசிக்கிறாங்க என்கிற விபரமாவது உனக்குத் தெரியுமா என்றான் இம்ரான்
-அப்ப அவங்க யாரும் உதவியே செய்யிலேன்னு சொல்றியா
-மேடையில சொன்னத செய்யாத ஒரு கூத்தாடி உனக்கு ரோல் மாடலா உனக்குத் தெரிஞ்சா அது உன் இஸ்டம் ஆனா நீ கடவுள்னு நம்புற ஏசு சொன்னதைவிட அரிதாரம் பூசி கலாச்சாரத்தைக் கெடுக்கிற கூத்தாடி சொல்றது உனக்கு நல்லதா படுது
-கலாச்சாரம் எப்படி அவரால கெடும் நாம நடந்துக்கிற முறையில் அல்லவா அது இருக்கு
-படத்துல பிக்னி உடை உடுத்திக்கிட்டு வர்ரவளோடு கைகோர்த்துக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இந்த விசயத்த அங்கீகரிக்கிற மாதிரி நடிக்கிறதும் பேட்டிக் கொடுக்கிறதும் சம்பாரிக்கிற பணத்தை வரிஏய்ப்பு செஞ்சிட்டு இந்திய தேசத்தின்
வளர்ச்சியை கெடுக்கிறதுமில்லாம தான் நடிக்கிறப்படம் வெற்றிப் பெறனும் என்கிறதுக்காக எதிரியைக்கூட கடவுள் என்கிற சுயநலவாதிகள் தான் இந்த நடிகர்கள் என்கிறத முதல்ல நீ புரிஞ் சுக்கனும் அவங்களோட சுயநலம் தெரியாம தான் அவங்கள ரோல் மாடலா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க
-எல்லாரையும் ஒரேக் கணக்குள எடுத்துக்கிறது எந்தவித த்துல நியாயம் அவரும் பல சேவைகள் செஞ்சவர்தான் என்றான் வில்சன்
ஏன் நாம கூடத்தான் நேற்றுப் பேப்பரைப் பார்த்துட்டு அந்த ஆர்பனேஜுக்கு பணம் அனுப்பி வைக்கலையா இது கூட சமூக சேவை தான். எதிர்ப்பார்ப்போடு செய்யிற எந்த உதவியும் சுயநலன் கலந்த துன்னு நான் நீனைக்கிறேன் என்றான் இம்ரான்
-வாயைக் கொடுத்து வாங்கி கட்டிகிட்டேனா என்றான் வில்சன்
-நான் அப்படி தினைக்கில புரியாம இருந்த நீ புரிஞ்சிக்கிட்டேன்னு தான் நான் நினைக்கிறேன் என்றான் இம்ரான்
ஆமா உங்க வேதம் என்ன சொல்லுதுன்னு சொல்லவே இல்லையே
பரவாயில்லையே நினைப்பு வச்சு கேட்கிறே
என்னைக் கேனையன் என்றே முடிவுப்பண்ணிட்டியா
இல்ல இனிமேல் தான் முடிவுப் பன்னப்போறேன்
எப்படி
இதைத் தெரிஞ்சுகிட்டப் பிறகும் பழைய குருடி கதவைத் திறடின்னு போயிட்டேன்னு வச்சிக்கோ என்ன நினைக்கிறதாம் உன்னைப் பத்தி என்றான் இம்ரான்.
டூ மச் இன்சல்ட்
-பார்ப்போம் உன்னோட ரோல் மாடலின் அடுத்தப் படம் வர்ர வரைக்குமாவது நீ சத்தியத்துல இருக்கியான்னு
-என்னை வாருனதுப் போதும் நீ சேதிய சொல்லு
-எங்க வேதம் என்ன சொல்லுது என்கிறதையும் எங்க நபி என்ன சொல்லி இருக்காரு என்கிறதையும் உனக்கு இப்ப சொல்றேன் என்று ஆரம்பித்தான் இம்ரான் விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகி யோரை அறிந்தவன் என்று தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்
இதைப் போலத்தான் தன்னுடைய வாழ்க்கையில் முஹம்மது நபி அவர்களும் வாழ்ந்து காட்டியும் சென்று இருக்கின்றார்கள், அதைப் பின்பற்றியே முஸ்லிம்கள் வாழ்றோம். நீ சொன்னியே ஏன் இந்த குருட்டு பக்தின்னு இதுக்கு பேரு குருட்டு பக்தி அல்ல இது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் சொல்லிலும் ஆதாரப்பூர்வமான சரித்திரக் குறிப்பீடுகளைப் கண்டும் கேட்டும் அதைப் பின்பற்றி நடக்கிறவன் தான் முஸ்லிம் என்கிறத முதல்ல நீ புரிஞ்சுக்கனும் அவர் சொல்லி ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிஞ்ச பிறகும் இது உயிரோட்டம் உள்ளதாய் இருக்கிறதையும் அதைப்பின்பற்றுறவங்க இருக்கிறாங்க என்கிறதையும் நீ தெரிஞ்ச்சிருப்பேன்னு நான் நினைக்கிறைன் என்றான் இம்ரான்
அப்படீன்னா உங்களக் காட்டிலும் பழமையானது எங்க மதமான கிருஸ்தவம் அது தான் இன்று உலகில் பலகிப் பெருகி இருக்கு அப்போ உங்களை விட எங்க வேதமான பைபிளும் எங்க கடவுளாகிய கிருஸ்துவும் தான் என்னால சொல்ல முடியும் இல்லையா என்றான் வில்சன்
ஆதாரத்தை காட்டிட்டு தாராளமாகச் சொல்லிக்க
என்ன ஆதாரம் வேண்டும் உனக்கு என்றான் வில்சன்
-இப்ப நீயே சொன்னே எங்க கடவுள் ஏசு கிருஸ்து என்று . ஏசு மனிதரா இல்ல தெய்வமா நீ நம்புகிற உன்வேதமான பைபிளில் நான் தான் கடவுள் அதனால் என்னையே வணங்குங்கள் என்று சொல்லி இருக்காரா அதை எனக்கு காண்பி பார்ப்போம் என்றான் இம்ரான்
அப்போ எங்க வேதமான பைபிளை நல்லா படிச்சிருக்கேன்னு சொல்லு என்றான் வில்சன்
-ஆமாம் என்னை இம்ரானாகத்தான் உனக்குத் தெரியும் ஆனா அதுக்கு முன்னாடி நான் இஸ்மவேலா இருந்தது உனக்குத் தெரியுமா என்று இம்ரான் கேட்க சப்தம் வராமல் திகைத்து அதிர்ச்சியில் உறைந்துப் போனான் வில்சன்

Friday, February 11, 2011

புரிந்தது மகத்துவம்









பசியும் பட்டினியும்
கைக்கோரத்து
இளமையை உரிஞ்சியது
முதுமை
ஒட்டிக்கிடந்த
வயிற்றுப் படுகையில்
வெள்ளமாய் நிறைந்தது
உணவு


கண்ணில் பறந்த
வண்ணத்துப் பூச்சிகள்
காணாமல் போனது
பூரண நிலவின் வெளிச்சம்
புதிதாய் தெரிந்தது
அவனுக்கு


உணவுத் தந்தவனை
சிம்மாசனம் ஏற்றியது
மனது
வழக்கமாய்
வரும் பழக்கம்
கடவுள் நீ
என்ற வாசகம்


சகோதரா
கடவுள் நானெனில்
என்னைக் காப்பவன்
யார்?
கேள்வியின் வேள்வியால்
தகித்தது மனது


பசி பறந்துவிட்டால்
சிந்தனையின்

ஊற்றுக்கண்
திறக்குமன்றோ
மனது பறைந்தது
ஆம் கடவுள்
அவனில்லை எனில்
காப்பது யார்?


முகவரித் தெரியாமல்
முன்னுரையா?
முடிவுகள்
தெரிந்தபின்னே
முகஸ்துதியா?


சகோதரா
நீ தான் சொல்லேன்
கடவுள் யாரென


அவன்
ஆற்றலின் அதிபதி
தனித்தவன். தன்னிகற்றவன்
தூயவன்.துலாக்கோலால் நிறுப்பவன்
அதிகாரத்தின் இருப்பிடம்
ஆன்மாவை கைப்பற்றுபவன்


அப்படியானால்
மனிதன் யார்?
மீண்டும் முறைத்தது
கேள்வி
இறைவன் செதுக்கிய
சிற்பத்தில்
அவன் ஊதிய உயிர்
அவனின் அடிமைகள் நாம்

எல்லாம் நான்
எதிலும் நான்
என்கிறதே மானுடம்


திமிரின் ஆரவாரம்
அவனுக்குத் தெரியுமா
அடுத்த நாளில்
அவன் கதி?


இது இறையை
எதிர்க்கும் போர் முரசு
இது கற்பனைத்
தடாகத்தில் கானல் நீர்
எல்லாம் ஏகன் தந்தது
எதற்கும் வரம்புள்ளது
எல்லையறியா
இப்பிரபஞ்சத்தில்
ஏன்
இந்த வீண்வாதம்


ஆற்றலும் அறிவும்
பின்னிப் பிணைந்ததல்லவா
மானுடம்?
குதற்க மனதில்
குடிபுகுந்த கேள்வி
அறிவையும் உயிரையும்
அருளில் பெற்றதால்
அகந்தையில் உழல்கிறதா
மனது


எப்படிச் சொல்கிறாய்
ஆணவத்தின் அதிகார்க் குரல்
இடியென இறங்கியது

இல்லா ஒன்றால்
உருவானான் மனிதன்
இருக்கின்ற இரண்டால்
கருவானது மானுடம்
இல்லாத ஒன்றில் படைப்பது
ஆற்றல்
இருப்பதில் செய்வது
அறிவு
இது மலைக்கும்
மடுவுக்கும்
மனிதன்றியா
மகத்துவம்


பின் எதற்காக
நிறப்பிறிகை?
ஒற்றுமை மைதானத்தில்
ஒன்றுகூட்ட
இறை தந்த
நுழைவுத் தேர்வு
சமத்துவ சொர்க்கத்தின்
கனிமரங்கள்
இறையச்சக் கடலில்
சங்கமிக்கும்
உணர்வு நதிகள்


எல்லாம் சரி
சகோதரா
தடுப்பதும் தருவதும்
அவனெனில்
எப்படி வந்தது
கயவர்களின் கையில்
அதிகாரம்

சத்தியம்
சோதனையால்
புடம் போடும்
அசத்தியம்
அவசரத்தில்
அரியணை ஏறும்
உண்மை வெளிச்சம்
ஒளிரும் நேரம்
பொய் பனி உருகி ஓடும்


இது இறைவன்
அறிவித்த ரகசியம்
மர்ம முடிச்சுக்கள் அதிலில்லை
உலகை ருசிப்பவனுக்கு
மறுமையில்லை
மறுமையை நினைப்பவனுக்கு
இவ்வுலகமில்லை

ஆக மனிதன்
சாகப் பிறந்தவன்
அவதாரமில்லை என்கிறாய்
உண்மை சகோதரா
உண்மை
மனிதன் மனிதன் தான்
நிலைக்கா ஒன்று
நித்தியமாகுமா?


புரிந்தது சகோதரா
புரிந்தது
மண்ணறையைத்
தனதாக்கிக் கொள்பவன்
மலஜலம் சும்பபவன்
வணக்கத்திறகுறியவனா


இருக்காது இருக்கவும் முடியாது


மெல்லத் திறந்தன இமைகள்
இமைகள் திறந்தால்
இதயமும் திறக்குமன்றோ?

Friday, December 17, 2010

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறதா?
குற்றச்சாட்டுக்களும் பதில்களும் பாகம் 1
எழுதியவர். பி. ஜெய்னுல் ஆபிதீன்
நபீலா பதிப்பகம் விலை 26.00ரூபாய்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

உலகம் முழுதும் ஒரு குற்றச்சாட்டு இஸ்லாத்தின் மீது இருந்தாலும் அதில் ஒரு சிலர் இஸ்லாமிய வரைவிலக்கணம் சரி தான் ஆனால் அதில் உள்ளக் கொள்கைரீதியில் முரண்பாடுகள் இருக்கின்றது அதில் ஒன்றுதான் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றது என்றும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் அவர்கள் சுதந்திரமாக இருக்கவில்லை என்ற வாதம். இது சரியானது தானா என்று அறியும் முன்னர் மற்றவேதங்களோ இல்லை என்றால் இன்று ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்றுச் சொல்லக்கூடிய நாடுகளோ அல்லது இதற்காக உரிமைக்குரல் எழுப்புகின்றவர் களோ என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் அலச வேண்டி யிருகின்றது

இஸ்லாம் பெண்களை கண்ணியப் படுத்துகின்றது என்பதற்கு பெண்கள் (அந்நிஷா) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் இடம் பெற்று இருக்கின்றது, ஆண்கள் என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமும் இடம் பெறவில்லை. இதைப் போன்று வேறு எந்த மத வேதங்களிலும் இருக்கின்றதா என்ற கேள்வி முதலில் எழுகின்றது. மேற்குலகின் அறிஞர் பெர்னாட்ஷா ஐ லைக் இஸ்லாம் பட் ஐஹேட் முஸ்லிம் என்றான் சிலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்காமல் முஸ்லிம்களை மாத்திரம் பார்த்து எடைப் போடுகின்றனர் இதன் காரணமாகத்தான் இப்படி பட்ட கேள்விகள்


இன்று ஆண்களைக் காட்டிலும் பெண்களே இஸ்லாத்தை உலக அளவில் அதிகம் அதிகமாய் தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்று வருவதைப் பார்க்கின்றோம். அவரகளை அது துன்புறுத்து கின்றது என்றால் அடிமைப் படுத்துகிறது என்றால் இஸ்லாத்தை எப்படி ஏற்க முன்வருகின்றார்கள். என்று சிந்திக்க வேண்டும்.

உலகில் நடந்துவரும் இந்தக் தவறான கருத்தாக்கத்தை கலையும் முகமாக இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றதா என்ற புத்தகத்தை பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எழுதி இருக்கின்றார் அவரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்பதை விளக்குவதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்

இந்த புத்தகம் பதிமூன்று தலைப்புகளில் எழுதப் பட்டிருக்கின்றது, இதில் இஸ்லாம் பெண்ணின் உரிமையைப் பறிக்கிறதா? ஜீவனாம்சம், பலதாரமணம், ஹிஜாப், ஆட்சித் தலைமை, பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? போன்ற தலைப்புக்களில் அவர் தந்திருக்கின்ற விளக்கங்கள் திருமறையிலிருந்தும் நபி மொழிகளிலிருந்தும் அடுகடுக்காண சான்றுகளை காண்கிறோம்.
பலதார மணம் பற்றிய கேள்விக்கு முதல் உலக யுத்தம் இரண்டாம் உலகயுத்தம் காரணமாக எத்தனை லட்சம் ஆண்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரங்களும் அவர்களின் மனைவியர் விதவைகளாகிய பின்னர் அவர்களுக்கு மறுமணம் அவசியம் என்பதையும் உலக கண்ணோட்டத்தோடு அலசி இருப்பது இதுவரை யாரும் இந்த கோணத்தில் அலசாத ஒன்றாகும். இப்படி அறிவு ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் இந்த புத்தகம் பக்கத்திறகுப் பக்கம் மின்னுகிறது

இந்த புத்தகத்தைப் படித்தால் தர்க்க ரீதியாக கேள்விக்கணைத் தொடுப்பவர்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லமுடியும். என்பது மாத்திரமல்ல நாம் அறிந்திராத பல கேள்விக்களுக்கும் பதில் கிடைக்கின்றது என்பது உண்மை. மொத்தத்தில் இந்த புத்தகம் அறிவுக் களஞ்சியம்.

இது ஒர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி.

Tuesday, December 14, 2010

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ஸ்கேனிங் பார்வை(புத்தக விமர்சனம்)

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

பாகம் 1 , பாகம் 2

எழுதியவர். ஏ. கே, அபதுல் ரஹ்மான்

நபீலா பதிப்பகம் விலை50.00,\\28.00

வேதங்களில் அறிவியல் சான்றுகளா? இது என்ன புதிதாக என்ற நினைப்புதான் வரும் இந்த புத்தகத்தை கையில் எடுக்கும் முன்பு வரை. இதற்கு காரணம் வேதங்கள் என்பது சாஸ்திர சம்பிரதாய மற்றும் வழிபடுகளுக்காக மட்டுமே என்ற நிலையில் தான் பார்க்கப்படுகின்றது. அதையும் தாண்டி வாழ்க்கை வழிகாட்டியாக குர்ஆன் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற குர்ஆனில் படித்துப் பார்த்தால் வானத்தைப் பற்றியும் மேகங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பல சமயவேதங்கள் எல்லாம் இறைக்கோட்பாடுகளைப் பற்றியே அறிவுருத்த குர்ஆன் மாத்திரமே மனிதன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனிதன் கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். மனிதன் தனக்குத் தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கடமைகள் என்று தரம்பிரிப்பதின் நடுவே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள், ஆராய்ந்துப் பாருங்கள் என்று அறிவுருத்துகின்றது.

அப்படி சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்கின்ற பொழுது சில இடங்களில் அது மேற்கோள் காட்டுகின்ற செய்திகள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது அது பற்றி இந்த புத்தகம் மிக அழகாக விவரிக்கின்றது அது என்ன என்பது பற்றி விமர்ச்சிப்பது தான் இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கம்,

இந்த பிரபஞ்சம் எப்படித் தோண்றியது என்பது பற்றியும் சீராகவும் நேர்த்தியோடும் அமைந்திருக்கின்ற வானத்தைப் பற்றியும், நாள் தோறும் இரவுப் பகழ் மாற்றம் பற்றியும். சுழலும் பூமி பற்றியும் முதல் பாகத்திலும் பூமியில மட்டுமே மனிதர்களால் வாழ முடியும் என்பது பற்றியும் ஏன் வானம் கூரையாக இருக்கின்றது என்பதுப் பற்றியும் பூமியைநோக்கி வரும் கதிர் வீச்சுக்கள் எப்படி தடுக்கப்படுகின்றது என்பது பற்றியும் இந்த பிரபஞ்சம் எப்படி விரிந்துக் கொண்டே செல்கின்றது என்பது பற்றியும் இன்றைய ஆய்வாளர்கள் எப்படி நமக்கு எடுத்து விவரிப்பார்களோ அது போன்றே ஆயிரத்து நானூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவரித்து இருக்கின்றது என்றால் அன்று விஞ்ஞானத்தை விட அஞ்ஞானம் கோலோச்சிய காலம் அதன் பின்னர் அறிவியலை சொன்னவர்கள் கொலை செய்யப்பட்ட காலம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மேலே குறிப்பிடத் தக்க தலைப்புகளில் ஆசிரியர் அவர்கள் குர்ஆனில் இருந்து வசனங்களை எடுத்து விளக்கி அது இப்பொழுது அறிவியல் ஆய்வாளர்களிடத்தில் என்ன தாக்கத்தை உருவாக்கி இருப்பதோடு அவர்கள் இது தான் இந்த குர்ஆன் சொல்வதே உண்மை என்ற கருத்து தெரிவித்திருப்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருப்பது பாராட்டுக் குறியதாகும்.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற முடிவுக்கு வந்தே விடுவார்கள் அந்த அளவுக்கு விவரித்துள்ள விளக்கங்களால் நிரம்பிக் கிடக்கின்றது

ஆக இந்த புத்தகம் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் மைல் கல்லாக இருக்கின்றது, ஆசிரியரின் இந்த முயறசியைப் பாராட்டியே தீர வேண்டும் அதோடு குர்ஆனில் உள்ள மேலும் அறிவியல் சான்றுகளையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

இது ஒரு இமைகள் ஸ்கேனிங் பார்வை விமர்சனம்

Friday, December 10, 2010

சமர்ப்பனம்

அந்த இலக்கியவாதியின் வார்த்தை விளையாட்டை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் மெய் மறந்திருந்தார்கள் அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. கைத்தட்டலால் அதிரவும் செய்தது.

வாசலில் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இம்ரானும் அவனின் ரும் மேட் நிக்ஸனும்.

-இன்னிக்கு தமிழ்நாட்டுல பேசப்படுகின்ற ஓரே கவிஞர் இவர்தான் என்ன தத்ரூபமான கவிதைகள் அவரோட வாரத்தையை பார்த்தியா நினைச்சே பார்க்க முடியாத சிந்தனையா இருக்கு என்றான் நிக்ஸன்.
-கவிதை என்றாலே அது பொய். கவிஞன் என்றால் அவன் பொய்யன் என்றான் இம்ரான்
-என்னடா சொல்றே
-இவர்களின் கவிதைகள் எதாவது ஒன்றில் சமூக அவலத்தை சுட்டிக்காட்டுற சிந்தனை வரிகள் எதாவது இருக்கின்றது என்று சொல்ல முடியுமா உன்னால
ஏன் இல்லை நீ பாக்கல படிக்கல என்றால் அவரின் வாரத்தைகள்ள உண்மையில்லைன்னு ஆயிடுமா என்றான் நிக்ஸன்
-ஆயிரம் சிருங்கார கவிதைகளை புனைந்துவிட்டு நடுவுல ஒரே ஒரு அர்த்தமுள்ள கவிதைகளை எழுதினா அதுக்கு என்ன அரத்தம் என்றான் இம்ரான்
-அவர குறைசொல்ற தகுதி உனக்கு இருக்குன்னு நீ நினைக்கிறியா என்றான் நிக்ஸன்
-விமர்ச்சிக்கிறதுக்கு என்ன தகுதி வேண்டும் என்று நீ எதிர் பார்க்குறே என்றான் இம்ரான்
-அதோ பார் ஒரு இளம் பெண் நமக்குப் பக்கத்துல நிக்கிறா அவளை வர்ணித்து ஒரே ஒரு கவிதையை என்கிட்டே நீ சொன்னா உனக்கு தகுதி இருக்குன்னு நான் ஒத்துக்கிறேன் என்றான் நிக்ஸன்
-எனக்கு அது எல்லாம் தெரியாது என்றான் இம்ரான்
-அப்ப எதுக்கு வீண் ஜம்பம் . விமர்சிக்கிறது ரொம்ப ரொம்ப சுலபம் நீ செய்யின்னு சொன்னா உடனே யூ டர்ன் அடிச்சு சுலபமா தப்பிச்சுக்கிறது இது நல்லவா இருக்கு என்றான் நிக்ஸன்
-அதுக்காக அவர் எழுதினது எல்லாமே உலகம் போற்றுகிற கவிதைன்னு சொல்லவரியா என்றான் இம்ரான்
-தகுதி இல்லாதவன் விமர்ச்சிக்க கூடாது என்கிறது தான் என்னோட கருத்து என்றான் நிக்ஸன்
-அப்போ ரசிக்கிறதுக்கும் கைதட்டுறதுக்கும் என்ன தகுதி வேணும் என்றான் இம்ரான்.
-கேட்கிறதும் புரிஞ்சிக்கிறதும் தான் தகுதி என்றான் நிக்ஸன்
-அப்போ புரியாதவன் என்னான்னு கேட்கவேக் கூடாதா பாமரன் புரிஞ்சுக்கிற மாதிரி கவிதை எழுதமாட்டீங்களா இல்லை எழுதறது இழுக்குன்னு நினைக்கிறீங்களா என்றான் இம்ரான்
-சரி அப்போ நீ தான் யதார்த்தமான ஒரு கவிதையை அந்த பெண்ணை பார்த்து வர்ணித்து சொல்லேன் என்றான் நிக்ஸன்
-என் மனசுல எழுறத சொல்றேன் அது கவிதையா இல்லையான்னு நீ தான் சொல்லனும் என்றான் இம்ரான்
-பார்ரா நீ கூட கவிதை சொல்லப்போறியா என சிரித்தான் நிக்ஸன்
-பாத்தியா இதுகூட ஒரு விமர்சனம்ங்கிறத நீ புரிஞ்சுக்கல அதனால தான் நான் சொல்றதுக்கு முன்பே விமர்ச்சிக்க ஆரம்பிசுட்டே என்றான் இம்ரான்
-சரிப்பா உன் கவிதை வரிகளை கேட்க நான் தயாராகிவிட்டேன் என்றான் நிக்ஸன்

”புன்னகைகள் இருப்பதினால்
பொன்நகைகளில் விருப்பமில்லையோ பெண்ணே
உன் போன்றே பெண்மணிகள் நினைத்துவிட்டால்
ஆண்களுக்கு கவலை நோய் ஏது?
தொல்லைகள் ஒரு கோடி வந்தாலும்
உன் முகம் கண்டு விலகாதோ
பெண்ணே நீ கற்ற
இரகசியத்தை உன் இனத்திற்கும் உரைப்பாயா?”

-இது தான் அந்த பெண்ணைப் பார்த்ததும் என் மனதில் உதித்த வரிகள் என்றான் இம்ரான்
பின்னால் நின்றிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஒரு புன்சிறிப்பு அரும்பியதை கண்டான் நிக்ஸன்
-சாரிடா இம்ரான் உனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கறதை நான் நினைச்சேப் பார்க்கல என்றான் நிக்ஸன்
-அந்தப் பெண் புன்னகைச் செய்ததை நாம இரண்டுப் பேருமே பார்த்தோமே அது தான் நான் சொன்ன கவிதைக்கு கிடைச்சப் பரிசுன்னு நினைக்கிறேன் என்றான் இம்ரான்
-நிச்சயமா நான் சொல்றேன்டா உனது கவிதை யதார்த்தமா இருந்துச்சு நீ இனிமேலும் கவிதை எழுதனும் என்றான் நிக்ஸன்
-வேண்டாம்ப்பா கவிதை எழுத ஆரம்பிச்சப் பின்னாடி நானும் செருக்கோடு எழுதமாட்டேனு என்ன நிச்சயம் என்றான் இம்ரான்
-கவிஞன் கிட்ட இருக்கின்ற பண்புகள்ல இதுவும் ஒன்னு இல்லையா
-அதனால
-அது தப்பே இல்ல என்றான் நிக்ஸன்
-இதுல இருந்து தான் நான் வேறுபடுறேன் என்றான் இம்ரான்
-எப்படி?
-நான் ஒரு முஸ்லிம் என்கிறத நம்புறவன் அதனால என்னால எல்லோரையும் போல எழுதிடவும் முடியாது முரண்படவும் முடியாது
-மத்தவங்க எப்படி கவிதையில முரண்படுறாங்கன்னு சொல்றே?
-ஒரு தமிழ்பட பாடல் வரியில வருது ”கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை தரமாட்டேன்” என்கிற வரி இதுக்கு என்ன அர்த்தம் கடவுள் தேவை உள்ளவன் அவனே வந்து கேட்டாலும் நான் தரமாட்டேன் என்கிறது கடவுளின் பவரை குறைக்கிறது போல தெரியலையா
இது மாத்திரமில்ல ஒரே கவிஞரே அடுத்தடுத்தப் பாடல்ல முரண்படுறதைப் பாடல்களா கேட்டதில்லையா
-அப்படி பட்ட பாடல் வரிகள் கூட இருக்கா என்ன
”மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ங்கிறாங்க”
அதுக்கு அடுத்தப் பாடல்ல ”கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்” என்று எழுதுறாங்க இந்த வரிகள் கடவுள் தன்மைக்கு எதிரானது என்கிறது தெரியலையா என்றான் இம்ரான்
-அப்போ உங்க மதத்துலேயும் தான் இப்படிபட்ட பாடலையும் பாடி இருக்காங்க என்கிறது தெரியுமா உனக்கு என்றான் நிக்ஸன்
நல்லாத் தெரியும் ”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொலவதில்லை” என்று பாடிவிட்டு அதுக்கு அடுத்த பாடல் ”நமனை விரட்ட மருந்தொன்று விக்கிது நாகூர் தர்ஹாவிலேன்னு” பாடுறது தப்பு இது ஓர் இறை கொள்கைக்கு முரண்பாடானது என்று விமர்ச்சித்து இருக்கின்றோம் இது போல யாராவது விமர்சித்து இருக்கங்களா என்றான் இம்ரான்
-அது உண்மை தான்,யாரும் அப்படி விமர்சிக்கல தான் என்றான் நிக்ஸன்
...இரண்டு வாரம் சென்றிருக்கும் நிக்ஸன் இம்ரானுக்கு தன் செல்போனின் பேசினான்
இம்ரான் எங்கேடா இருக்கே
இது லஞ்ச் டைம்னு உனக்குத் தெரியாதா கேண்டீன்ல தான் இருக்கேன் என்னடா என்ன விசயம்
முதல்ல போயி ரேகான்னு ஒரு வார இதழ் விக்கும் அத வாங்கிப் பாரு என்றான் நிக்ஸன்
அதுல என்ன இருக்கு என்றான் இம்ரான்
வாங்கிப்பாரு தெரியும் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான்
அவசரம் அவசரமாக ஆபீஸிலிருந்து வெளியே வந்து அருகில் இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த ரேகா என்ற வார இதழை வாங்கிப் புரட்டி பார்த்தான் இம்ரான் அதில் முதல் பரிசுப் பெற்ற கவிதையாக அன்று அந்தப் பெண்ணை வர்ணித்து சொல்லி இருந்தான் அல்லவா அந்த கவிதை தான் பிரசுரிக்கப் பட்டிருந்தது மட்டுமல்ல என்னை வர்ணித்து பாடிய அந்த முகம் தெரியாத அந்த கவிஞனுக்கு சமர்ப்பிக்கன்றேன் என்று அடிகோடிடப்பட்டிருந்து.

Saturday, December 4, 2010

மாமனிதர் நபிகள் நாயகம்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

மாமனிதர் நபிகள் நாயகம்

எழுதியவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்
இரண்டாம் பதிப்பு விலை..ரூபாய் 30.00

உலக வரலாறுகளில் ஒரு நபரை அதிகமாக புகழ்ந்ததும் இகழ்ந்ததும் உண்டு என்றால் அவர் இந்த மனிதராக மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எதார்த்த வாழ்க்கையில் அவரின் ஆன்மீகம், அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் தூய்மையான செயல்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக இருக்கின்றது என்பது உண்மையாகும். அது மாத்திரமல்ல, உலகில் எந்த மனிதரும் சொல்லாத ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர் சொல்லி இருக்கின்றார். இதை வேறு எந்த மனிதரும் உலகில் இதற்கு முன் சொல்லி இருக்கின்றார்களா என்றால் இல்லை. அவருக்கு பின்னர் யாராவது சொல்லி இருக்கின்றார்களா என்று சரித்திரக் குறிப்பேடுகளை ஆராய்ந்தால் முஹம்மது அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் அப்படி என்ன தான் சொன்னார்? உங்களின் வாழ்க்கை இந்த உலகத்திலும் இறப்பிற்கு பின்னர் முஸ்லிம்கள் நம்பும் மறுமை வாழ்க்கையிலும் வெற்றிப் பெற வேண்டும் என்றால் அல்லாஹுவின் வேதமான குர்ஆனையும் என் வழிமுறையையும் பார்த்துப் பின்பற்றுங்கள் என்றார்கள். இது போன்று தன் வாழ்க்கையை முன்னிருத்தி யாராலும் கூறிட முடியுமா என்றால் முடியாது என்பது தான் நம் பதிலாக இருக்கும். அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருப்பதின் காரணமாகத்தான் அவரின் மேல் குற்றம் சுமத்த நினைப்பவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் தாங்கள் சார்ந்திருக்கின்ற மதங்களின் அவதாரபுருஷர்கள் என்றுச் சொல்லப்படுகின்ற யாருக்கும் இப்படி ஒரு தூய்மையான வரலாறு இல்லையே என்ற ஆதங்கம் துயரமாகி, அதுவே கோபாவேசமாக மாறி இருப்பதை அறியமுடிகின்றது. அதன் விளைவாகவே இத்தனை தவறான விமர்சனங்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஏவுகணைகளைப் போல விரைந்து வந்தாலும், அந்த மாமனிதரின் தூய வாழ்க்கையே அதை எதிர்த்து தடுக்கும் ஸ்கட் போல இருப்பதைப் பார்க்கின்றோம்.
நபிலா பதிப்பகம் இந்த புத்தகத்தை 2004 ஆம் ஆண்டு வரை இருமுறை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவில் இயங்கும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் (தாஃவா செண்டர்) இந்த புத்தகத்தை திருத்தமின்றி வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
அந்த மாமனிதரின் வரலாற்றை பல கோணங்களில் பலரும் தங்களின் ஆக்கங்களாக வெளியிட்டிருந்தாலும், இந்த புத்தகம் எல்லாவற்றில் இருந்தும் வேறுபடுகின்றது என்பது உண்மையாகும். இது எப்படி வேறுபடுகின்றது என்பதை இனி ஆராய்ந்து விமர்சிப்பதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கமாகும்.
பொதுவாக ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி எழுதுகின்ற யாரும் அவரின் வாழ்க்கையில் நடந்த உயர்ந்த சம்பவங்கள் மற்றும் அற்புதங்களை எடுத்துக் கூறி அவரின் செயல்களுக்கு புனிதத்தை சேர்ப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகளில் உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை, சொத்து சேர்க்கவில்லை என்று இல்லை இல்லை என்பதாக காணுகின்ற பொழுதே, இவரையும் இன்றுள்ள அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களையும் நம் மனக்கண்ணில் நிறுத்தி, ஒப்பிடவைத்து இந்த மாமனிதரை எட்டாத கோபுரத்தின் உச்சியில் வைத்துவிடுகின்றது.
இன்றுள்ள ஆன்மீகத் தலைவர்கள் தங்களின் புகழுக்காக புனிதங்கள் என்ற பெயரில் தந்திரங்களை செய்வதையும், அவைகள் அனைத்தும் அற்புதங்களாக இந்த அறிவியல் உலகத்தில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதையும் காண்கின்றோம். ஆனால் புகழுக்கே ஆசைப்படாத மனிதராக மாமனிதர் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இந்நூலில் காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த துயரம் மற்றும் எளிமையான சம்பவங்களை எடுத்து கூறுவது அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றதோ என்று நினைத்தோமென்றால், அவ்வாறில்லாமல் இந்த மாமனிதர் தன் வாழ்க்கையை எவ்வளவு தூய்மையாக வாழ்ந்து காட்டி சென்றிருக்கின்றார்கள் என்ற வியப்பு கலந்த ஆனந்த கண்ணீரை வரவழைக்க்கின்றது. அது அவரின் மதிப்பை முன்பைக்காட்டிலும் உயர்த்திவிடுவதோடு அவரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
முற்றிலும் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு நெஞ்சில் நிறைந்ததாக இருக்கும் என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. மொத்தத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற இந்த புத்தகம் ஒரு முக்கிய பதிவாகவும் முத்திரைப் பதிவாகவும் திகழ்கின்றது என்று மக்களை சொல்லவைக்கும்.

இது ஓர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி