> >

Saturday, November 24, 2007

குரல் கொடு தமிழா

தமிழ் தாய்
மண்
அடகு போகின்றது.

மீட்டெடுக்க
கவியரசர்களைக்
காணோம்
தன்னலப் பேரரசகள்
முளைக்கிறார்கள்.

சிருங்காரத்தை
சிற்பமாக்கி
சித்து விளையாடும்
சினிமா.
வக்கிர சிந்தனையின்
ஊற்றுக் கண்.

பண்பாட்டின் மீது
படையெடுப்பாய்...
திரைத் தொடர்கள்.
மண்ணின் மாண்புகளை
புதைத்திடும்
புதைகுழி.

ஆன்மாவைக்
குறிவைத்து
அதிரடித்தாக்குதல்.

ஜாதியில்
எரிகிறது மானுடம்
சா ''தீ'' என
சொல்வாரில்லை
அமைதி பூங்காவில்
குருதிப் பூக்கள்.

சாவுமணி
அடிக்கிறது
சர்வதேசம்.
தாங்குமோ
நம்
தமிழ்தேகம்.

களைகளின் கையில்
களைக் கொத்தி
உளிப் பிடித்தவன் எல்லாம்
சிற்பி.

அனாச்சார சுனாமி
கலாச்சாரத்திற்கு
காவலா?

விரிசலின் பிடியில்
பெற்றோர்
தன் மனப்
பரிசலின் மடியில்
மக்கள்.
ஒட்டி வாழ்ந்த
காலமெல்லாம்
குறைவில்லையே.
உறவை
வெட்டி வாழும்
காலமெல்லாம்
நிறைவில்லையே.

உலகப் பற்றாளர்களே
கொஞ்சம்
தமிழ் மண் மீதும்
பற்று வையுங்கள்.

தமிழ்த்தாய்
கண்களில்
கண்ணீர்.

மீட்டெடுக்க
கைகள் வேண்டாம்
ஒரு முறையேனும்
குரல் கொடுங்கள்.

Tuesday, November 20, 2007

சமாதானம்

வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிகிறது.
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதேப் பாடல்கள்
தொடரும் வரை -
நேயர்களுக்கு நன்றி
கூறி விடைபெறுவது...

காவல்

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்

Tuesday, November 6, 2007

யார் குற்றம்?

பிருந்தாவனத்தை
சஹாராவாக்கியது
யார் குற்றம்?
வாழ்க்கை நாணயம்
இரு
பக்கங்களிலானது
என்று
புரிந்த பின்னும்.

மொழி

காற்றின் மொழிகேட்டேன்
குளிர் என்றது;
அலையின் மொழிகேட்டேன்
நடனம் என்றது;
மரத்தின் மொழிகேட்டேன்
திமிர் என்றது;
அன்பே உன் விழி பேசும் மொழி
கேட்டேன்
மௌனமானாயே...

மறுபக்கம்

காதலுக்கு
பச்சைக் கொடி
காட்டும் கதாநாயகன்
தன் இல்லத்தில்
அரிதாரம் கலைகின்றான்
வில்லனாய்...

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
ஒற்றை நாணயம்
தோல்வியும்,வெற்றியும்-அதன்
இரண்டு பக்கங்கள்.

வெற்றியில்
உழழ்வதும்
தோல்வியில்
துவழ்வதும்
மானுட இயல்பு.

லட்சியத்தால்
மனதிற்குள்
கோடுபோடு
முயற்சியால்
அதற்கு ரோடுபோடு.

பயம்தான்
முயற்சியின்
முன்விரோதி
பயத்திற்கு பயம்காட்டு.

தடைக்கற்களில்
தவமிரு
தட்சணைகள்
தானாய் வரும்.

வெண்ணிலவிற்கு
ஆசை வேண்டாம்
கை
மண்ணளவிற்கு
முயற்சி செய்.

அகந்தையை
அகற்று
அன்பு
அரவணைக்கும்.

தூற்றலை
துரத்து
ஆற்றல்
ஆராதிக்கும்.

இழப்பை
மதிப்பிடு
அது அனுபவமாகும்
இருப்பதில்
செயல்படு
அது ஆரோக்கியமாகும்.

நம்
செயல்களல்லவா
நாளை நம்மைப்
பின் தொடரும்.