> >

Monday, August 18, 2008

சுமைதாங்கியின் வலி (தொடர்ச்சி)

- இப்போ இந்த இராத்திரி நேரத்தில் எங்கேன்னா போறேள் என அவரின் மனைவி
கேட்டாள்.
- தூக்கம் வரலடி. வெளியே ஒலிபெருக்கியில் ஏதோ பேசின்டு இருக்காள். அதைக் கொஞ்சம்
கேட்டுண்டு வந்தா மனசு பாரம் குறையும்.

- சித்த இருங்கோ நானும் வர்ரேன்.

இருவரும் மாடி ஏறினார்கள். ஒலிபெருக்கியின் சப்தம் இப்பொழுது துல்லியமாக காதில் விழுந்தது.

அது இஸ்லாமியர்களின் தெருமுனைப் பிரச்சாரம். அதன் சாரம்சமானது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களின் வயதான தாய்,தந்தையரை மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். உங்களின் தாயின் காலடியில் சொர்க்கம் இருப்பதை மறந்து விடாதீர்கள். இப்படி கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் தந்தையை பார்த்ததில்லை. பிறந்த சில வருடங்களிலேயே தாயையும் இழந்து அனாதையாக இருந்தவர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

பெற்றோர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான், மனிதனுக்கு அவர்களின் பெற்றோர் குறித்து விவரித்துள்ளோம். அவனை அவன் தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாக சுமந்தாள். அவனுக்கு இரண்டு வருடம் பால் புகட்டனாள், எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செழுத்துவாயாக என்னிடமே உங்களின் திரும்புதல் உண்டு.

இதுமட்டுமல்ல அன்புக்குரியவர்களே! மேலும் கூறுவதைக் கேளுங்கள். அன்பு, பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. சிறுவனாக இருக்கும் பொழுது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக என்று பிரார்த்தனைச் செய்யச் சொல்கின்றான்.

மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள். பெற்றோர்க்கும், உறவினர்க்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இருவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரின் மனைவி தன் கணவரிடம்

- என்னன்னா நம்ப பிரச்சினையைப் பற்றி பேசிண்டு இருக்கா?

- ஏதோ முஸ்லிம்களின் பிரச்சாரம் போல இருக்குடி. உன் புள்ளை மேடையில் பேசினானே
கேட்டியோ? முஸ்லிம்கள் இந்த முதியோர்கள் இல்லத்தில் இல்லாததை கண்டு
வருத்தப்பட்டான் இல்லையோ? அதற்காண காரணம் எனக்கு இப்பத்தான்டி விளங்குது.

- என்னத்த புரிஞ்சுண்டேள்.

- ஒருத்தரோட வாக்கும், அவர் சொன்ன வேதமும் இத்தனை வருசமா
கடைபுடிக்கிறாங்கன்னா? அதில் உயிரோட்டமும், சத்தியமும் இருக்குன்னுதானடி அர்த்தம்?
இதெல்லாம் நமக்கு புரியாம போச்சே? எல்லாம் சரியா புரிந்திருந்தா இப்படியொரு நிலை
நமக்கு ஏற்படாமலே இருந்திருக்கும் இல்லையா?

- ஏதேதோ பேசரேள். வேதங்கள் எல்லாம் நல்லது தான் சொல்லது அதன்படி
நடக்குனுமோன்னா.

முற்றும்.

சுமைதாங்கியின் வலி

சுமைதாங்கியின் வலி

அந்த முதியோர் இல்லம் 25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருக்க விழா கதாநாயகனாக அமெரிக்காவிலிருந்து ஒரு பிரமுகர் வருகைத் தந்திருந்தார். ஒவ்வொருவரும் இந்த இல்லத்தின் வளர்ச்சி குறித்து ஒவ்வொருவிதமாக சிலாகித்துப் பேசினார்கள். தொடங்கப்பட்ட காலத்திலிருந்த நபர்களின் எண்ணிக்கையையும், இன்று அதன் வளர்ச்சியால் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்ற கணக்கையும் சொல்லி முடித்தார்கள். கடைசியாக பேச எழுந்தார் அந்த அமெரிக்க பிரமுகர்.

பெரியோர்களே! இந்த மாதிரி முதியோர்கள் இல்லம் தொடங்கப்பட்ட பின்புதான் எங்களைப் போன்றவர்கள் நிம்மதியாக வெளிநாட்டில் வாழ்வை கழிக்க முடிகின்றது. வயதான பெற்றோர்களை கவனிக்க நேரம் இன்றி வாழ்கின்றோம். அதனால்தான் பெற்றோர்களை இந்த முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டுச் செல்கின்றோம். வீட்டில் இருப்பதை விட இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உங்களின் முகங்களைப் பார்த்து உணர்கின்றேன். பெற்றோர்களை இந்த இல்லங்களில் விட்டுச் செல்வதை ஒரு கவுரவக் குறைச்சலாக நான் கருதவில்லை. வீட்டில் கிடைக்கும் நிம்மதியை விட இங்கு நிம்மதியாக இருக்கின்றீர்கள். வெளிநாடுகளில் கூட இதுபோன்ற முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அதை அரசாங்கமே ஏற்று நடத்துகின்றது. ஆனால் இங்கு தனியார் துறை எடுத்து நடத்துகின்றார்கள். அவ்வளவுதான் வித்தியாசமே. நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு குறை உள்ளது. அதாவது நமது நாட்டில் எல்லா சமயத்தவர்களும் வாழ்கின்றோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மட்டும் இம்முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தேடி வருவதில்லை. அப்படிப்பட்ட இஸ்லாமியர்களையும் இவ்வில்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆவலாகும். இதை ஒரு கோரிக்கையாகவே உங்களிடம் நான் இந்நேரத்தில் வைக்கின்றேன். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறி அமர்ந்தார். அந்த இல்லத்தில் இருப்பவர்களை விட அழைப்பின் பேரில் வருகைத்தந்தவர்களின் கைதட்டல் பலமாக இருந்தது. விழாவும் இனிதே முடிந்தது.

அந்த அமெரிக்க பிரமுகர் பத்தாம் எண் அறைக்குள் நுழைந்தார். அங்கே அவரின் தாய், தந்தையர்கள் அமர்ந்திருந்தர்கள். இவர் அவர்களிடம்,

- என்னப்பா எப்படி இருக்கேள் ஷேமமா இருக்கேளோன்னோ?

- ம் நல்லா இருக்கோம்பா.

- உங்களை நன்னா கவனிச்சுக்கிறா தானே?

- ஓ நன்னா கவனிச்சுக்றாங்கபா.

- அதுதானே பார்த்தேன். நான் இருக்றச்சே நீங்க கவலைப்பட வேண்டாம். என்ன
வேண்டுமென்றாலும் என் கிட்ட கேளுங்கோ. நான் இங்குள்ளவாளுடன் கூறி
உங்களுக்காண தேவைக்கு ஏற்பாடு செய்கின்றேன். எனக் கூறியவாறே தனது கை
கடிகாரத்தை பார்த்தார்.

- என்னப்பா வேலை எதுவும் இருக்கா மணியைப் பார்க்குறே?

- ஆமாம்பா. பிளைட்டுக்கு டயம் ஆயிடுத்து. சென்னையிலிருந்து டெல்லிக்கு பத்து மணிக்கு பிளைட். என் பால்ய சினேகிதன் டெல்லியில் இருக்கான் அவன் கூட இரண்டு நாட் தங்கிட்டு உடனே அமெரிக்கா கிளம்பனும். உங்களைப்பார்க்கவே இந்த புரோகிராமுக்கு ஒத்துக்கிட்டேன். நான் கிளம்புறேன். டேக் கேர் பை பை. என்று விடைபெற்றுக் கொண்டார்.

அறை வெறிச்சோடியது பழைய நிகழ்வுகளை அந்தப் பெரியவர் மனதிற்குள் போட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த அவர் மனைவி அவரைப்பார்த்து கேட்டார்.

- என்ன அப்படி வெறிச்சு பார்த்துண்டு இருக்கேள்?

- நோக்கு தெரியுமோல்லியோ அவன் பிறக்கறச்சே நீ எத்தனை பாடுபட்டேன்னு?

- தெரியும்ன்னா இப்போ அதுக்கு என்ன?

- அவன் பேசின்டு போனதை பார்த்தியாடி.

- கலி முத்திடுத்து. மனுசா பணம் பணம்னு பறக்குறா. இதுல இவன மட்டும் விதிவிலக்கா
பார்க்கமுடியுமோன்னோ?

- பணம் என்னடி பணம். இவன் அமெரிக்காவிற்கு போறச்சே நம்பன்ட என்னடி இருந்துச்சு.
என் தாசில்தார் பதவி, ஒரு வேலி நிலம் அதுதானடி நம் சொத்து. வி.ஆர்.எஸ்
வாங்கின்டு அந்த பூமியையும் வித்துட்டு தானே இவனை அமெரிக்காவிற்கு அனுப்பி
வைத்தோம்.

- நேக்கு தெரியரது. ஆனால், பிள்ளையாண்டான் மறந்துட்டானே.

- பெத்தவங்களையே மறந்து போறவன் சமயத்தில் நாட்டையும் மறந்துடுவான். பணத்திற்கு
வேண்டி நம்மை மறந்தவன். காசுக்காக எதையும் செய்வான். மனுசாலுக்கு பணமும்,
பதவியும் வந்துடுத்துன்னா பூமியில நிக்க மாட்டாடி. இங்க நம்ம கூட ரெண்டு நாள் கூட
இருக்க மாட்டானாம். பால்ய சினேகிதன் கிட்டே இரண்டு நாள் வாசம் பண்ணப்
போறானாம். போகட்டும், போகட்டும். அதுல வேற மேடையில் நம்ம நாட்ல எல்லா
சமயத்தாவாலும் வாழ்றாங்களாம். இந்த மாதிரி இல்லத்தில மட்டும் இஸ்லாமியர்கள்
இல்லை என்பது ரொம்ப வருத்தமாக போயிடுத்து இவருக்கு.

- பாவம் இஸ்லாமியர் அவங்க குடும்பம் புள்ளை, குட்டிகளோட இருக்குறது அவனுக்கு
புடிக்கலியோ என்னமோ என்றார் அவர் மனைவி.

- மனுசனுக்கு எண்ணம் போல வாழ்வுடி.

- சித்த சும்மா இருங்கோ. இரத்த கொதிப்பு அதிகமாகிடப் போறது.

- இரத்தக் கொதிப்பு மட்டும் இல்லைடி எல்லாமே ஏறிடுது. ஏன் வாழ வேண்டும் என்கின்ற
விரக்தியும் வந்துடுது.

- ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னுதான் வளர்த்தோம். ஆனால், அவன் நம்பல
நட்டாத்துல விட்டுட்டான். அவன நம்பி வாழலேன்னு நினைத்துக்க வேண்டியதுதான்.

- சத்தியமா அதுதாண்டி உண்மை. என்னோட பெண்ஷன் பணம் தாண்டி இப்போ நம்மை
காப்பாத்துது.

- விடுங்கோண்னா. அவனைப்பத்தி நினைத்து உடம்பை கெடுத்துக்காதேள்.

- முடியலடி. முடியல. நாம இவனை நன்னா படிக்கவச்சு அழகு பார்த்தோம். நாம நம்
கடமையை செஞ்சாமாதிரி அவன் அவன் கடமையை மறந்துட்டானடி. தனக்கு இதுபோல
வராதுன்னு நினைச்சுட்டான் போல. இந்தியாவுல வாழ்ந்த இவனுக்கே கூட்டு குடும்பத்த
பத்தின அறிவு இல்லைனா இவனோட புள்ளை குட்டிங்க அமெரிக்காவுலன வளருது
அதுங்களுக்கு எங்கேடி விளங்கப்போவுது. இவன் எட்டடி பாய்ந்தால் இவனோட புள்ளைங்க
பதினாறு அடி பாயப்போதுங்க.

- எத்தனை வாட்டி சொல்றது. கொஞ்சம் பேசாம இருங்கோண்ணா. இப்படி பேசின்டே
இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது.

மனைவியின் அதட்டலால் சிறிது வாய் மூடினார். அந்த இரவுநேர அமைதியில் எங்கிருந்தோ ஒலி பெருக்கியின் சப்தம் காதுகளில் அலை மோதியது. அது என்ன என கூர்ந்து கேட்கத் தொடங்கினார். அது மேடைப் பேச்சுப் போல இருக்க. அந்தப் பேச்சு அவரை வசீகரிக்க அதைக் கேட்கவும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கவும் மேல்மாடி நோக்கி நகரச் தொடங்கினார்.

தொடரும்...