> >

Saturday, December 4, 2010

மாமனிதர் நபிகள் நாயகம்

ஸ்கேனிங் பார்வை (புத்தக விமர்சனம்)

மாமனிதர் நபிகள் நாயகம்

எழுதியவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்
இரண்டாம் பதிப்பு விலை..ரூபாய் 30.00

உலக வரலாறுகளில் ஒரு நபரை அதிகமாக புகழ்ந்ததும் இகழ்ந்ததும் உண்டு என்றால் அவர் இந்த மனிதராக மட்டுமே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எதார்த்த வாழ்க்கையில் அவரின் ஆன்மீகம், அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் தூய்மையான செயல்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக இருக்கின்றது என்பது உண்மையாகும். அது மாத்திரமல்ல, உலகில் எந்த மனிதரும் சொல்லாத ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர் சொல்லி இருக்கின்றார். இதை வேறு எந்த மனிதரும் உலகில் இதற்கு முன் சொல்லி இருக்கின்றார்களா என்றால் இல்லை. அவருக்கு பின்னர் யாராவது சொல்லி இருக்கின்றார்களா என்று சரித்திரக் குறிப்பேடுகளை ஆராய்ந்தால் முஹம்மது அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் அப்படி என்ன தான் சொன்னார்? உங்களின் வாழ்க்கை இந்த உலகத்திலும் இறப்பிற்கு பின்னர் முஸ்லிம்கள் நம்பும் மறுமை வாழ்க்கையிலும் வெற்றிப் பெற வேண்டும் என்றால் அல்லாஹுவின் வேதமான குர்ஆனையும் என் வழிமுறையையும் பார்த்துப் பின்பற்றுங்கள் என்றார்கள். இது போன்று தன் வாழ்க்கையை முன்னிருத்தி யாராலும் கூறிட முடியுமா என்றால் முடியாது என்பது தான் நம் பதிலாக இருக்கும். அவரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருப்பதின் காரணமாகத்தான் அவரின் மேல் குற்றம் சுமத்த நினைப்பவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் தாங்கள் சார்ந்திருக்கின்ற மதங்களின் அவதாரபுருஷர்கள் என்றுச் சொல்லப்படுகின்ற யாருக்கும் இப்படி ஒரு தூய்மையான வரலாறு இல்லையே என்ற ஆதங்கம் துயரமாகி, அதுவே கோபாவேசமாக மாறி இருப்பதை அறியமுடிகின்றது. அதன் விளைவாகவே இத்தனை தவறான விமர்சனங்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஏவுகணைகளைப் போல விரைந்து வந்தாலும், அந்த மாமனிதரின் தூய வாழ்க்கையே அதை எதிர்த்து தடுக்கும் ஸ்கட் போல இருப்பதைப் பார்க்கின்றோம்.
நபிலா பதிப்பகம் இந்த புத்தகத்தை 2004 ஆம் ஆண்டு வரை இருமுறை வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவில் இயங்கும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் (தாஃவா செண்டர்) இந்த புத்தகத்தை திருத்தமின்றி வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
அந்த மாமனிதரின் வரலாற்றை பல கோணங்களில் பலரும் தங்களின் ஆக்கங்களாக வெளியிட்டிருந்தாலும், இந்த புத்தகம் எல்லாவற்றில் இருந்தும் வேறுபடுகின்றது என்பது உண்மையாகும். இது எப்படி வேறுபடுகின்றது என்பதை இனி ஆராய்ந்து விமர்சிப்பதே இந்த ஸ்கேனிங் பார்வையின் நோக்கமாகும்.
பொதுவாக ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி எழுதுகின்ற யாரும் அவரின் வாழ்க்கையில் நடந்த உயர்ந்த சம்பவங்கள் மற்றும் அற்புதங்களை எடுத்துக் கூறி அவரின் செயல்களுக்கு புனிதத்தை சேர்ப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகளில் உண்டு சுகிக்கவில்லை, உடுத்தி மகிழவில்லை, சொத்து சேர்க்கவில்லை என்று இல்லை இல்லை என்பதாக காணுகின்ற பொழுதே, இவரையும் இன்றுள்ள அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களையும் நம் மனக்கண்ணில் நிறுத்தி, ஒப்பிடவைத்து இந்த மாமனிதரை எட்டாத கோபுரத்தின் உச்சியில் வைத்துவிடுகின்றது.
இன்றுள்ள ஆன்மீகத் தலைவர்கள் தங்களின் புகழுக்காக புனிதங்கள் என்ற பெயரில் தந்திரங்களை செய்வதையும், அவைகள் அனைத்தும் அற்புதங்களாக இந்த அறிவியல் உலகத்தில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதையும் காண்கின்றோம். ஆனால் புகழுக்கே ஆசைப்படாத மனிதராக மாமனிதர் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இந்நூலில் காணப்படுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த துயரம் மற்றும் எளிமையான சம்பவங்களை எடுத்து கூறுவது அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றதோ என்று நினைத்தோமென்றால், அவ்வாறில்லாமல் இந்த மாமனிதர் தன் வாழ்க்கையை எவ்வளவு தூய்மையாக வாழ்ந்து காட்டி சென்றிருக்கின்றார்கள் என்ற வியப்பு கலந்த ஆனந்த கண்ணீரை வரவழைக்க்கின்றது. அது அவரின் மதிப்பை முன்பைக்காட்டிலும் உயர்த்திவிடுவதோடு அவரைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
முற்றிலும் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு நெஞ்சில் நிறைந்ததாக இருக்கும் என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. மொத்தத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற இந்த புத்தகம் ஒரு முக்கிய பதிவாகவும் முத்திரைப் பதிவாகவும் திகழ்கின்றது என்று மக்களை சொல்லவைக்கும்.

இது ஓர் இமைகள் ஸ்கேனிங் பார்வையின் விமர்சனப் பகுதி

0 comments: