> >

Friday, April 29, 2011

தீர்ப்பெனும் மணற்கயிறு

என் தேசம் விற்பனைக்கோ
என்ற கவலை
அந்நிய முதலீடும்
ஆளும் வர்க்க
அக்டோபஸ் கைகளும்
சங்கமித்த இந்நேரம்

வளர்ச்சிப் பாதைக்கு
வித்திடுகிறார்களாம்
வின்வெளியில்
அப்பொழுதானே
கணக்கைக் காற்றில்
எழுதலாம்
கனவுகளில் தூசி தட்டலாம்

பங்கு பிரிப்பதிலும்
நுங்கு தின்பதிலும்
அவர்களுக்கு நிகர்
அவர்களே.
அங்கே இவர்களுக்கு
நிறபேதமில்லை
இலக்க பேதங்களைத்
தவிர

பூக்களின் குவியல்
பறிப்பவனுக்கு
சொந்தமில்லை

இமயமலைச் சாரல்
இதமான சூழல்
வற்றா ஜீவநதிகள்
வற்றிய வாழ்க்கை
நிரம்பா வயிறும்
நித்திய சோகமுமாய்
நகரும் நாட்கள்

எங்கு நோக்கினும்
சடலம்
இதயம் கனக்கும்
அவலம்
இது தானா
என் தேசத்தின்
ஒற்றுமைப்
படலம்

உண்ண உணவில்லை
உடுத்தவோ உடையில்லை
எத்தனை நாட்கள்
தின்பது நிலாச்சோறு
தானமானது வியர்வைத்
துளிகள்
சொந்தமானது சோகச்
சுமைகள்
எத்தனை நாட்கள்
பசிக்கடலில்
பட்டினி சவாரி

கர்வத்தின்
உச்சியில்
வாழ்பவர்களே
சற்று வீழ்ச்சியின்
ஆழத்தையும்
நினைவில்
வையுங்கள்.

ஓடிய நரிகள்
வேதம் ஓதின
ஓடும் நரிகளும்
அரிதாரம் பூசுகின்றன.
நடந்ததும் நடப்பதும்
மறக்கடிக்கவா
இந்த நாடகம்

ஐந்தாண்டுகள்
திட்டமிட்டுத்
தீட்டப்படும்
திட்டங்கள்
எல்லாம்
தங்களின் பை
நிறப்பத்தானோ

எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
உத்வேகம் கிளப்பும்
புதிய பெருச்சாலி
சுனாமியை மிஞ்சும
பெரும் சூராவளி.

கூட்டுக் களவாணிகளால்
கப்பல் ஏறும்
இந்தியாவின் மானம்
அரியணை
ஏறத்துடிக்கும்
அரசியல்வாதிகளால்
அவமானம்


இவர்கள்
அதிகார கமண்டலத்தை
தூக்கித்திரியும்
அரசியல் ஆண்டிகள்

வாழ்த்தவோ
இல்லை
வீழ்த்தவோ
துருப்புச் சீட்டாய்
வருகின்றத் தேர்தல்


பணநாயகம்
பந்தி விரித்தால்
பாமரனின்
பசி ஆற்றுமா

வழக்குகள்
வழக்கத்தைவிட
வேகமெடுக்கும்
கடைசியில்
வசப்பட்டு
கரைபடியும்

குரங்கு பங்கிட்ட
அப்பமாய்
தீர்ப்புகளும்
மடைமாறும்

குஜராத்
கொடுமைளுக்கே
நீதிக்கு விழிப்பில்லை
பின் யாருக்கு வேண்டும்
தீர்ப்பு எனும்
மணல் கயிறு..

1 comments:

said...

என்ன அருமையான ஒரு கவித் தொகுப்பு மிக்க அருமை சகோதரி/சகோதரர் தங்களின் படைப்புகளுக்கு இன்று முதல் நான் வாசகன் ஆகிவிட்டேன்,தொடர்ந்து பதிந்து எங்கள் நெஞ்சங்களில் தங்கள் படைப்புகளை நிழலாடச் செய்யுங்கள் ஏக இறையோன் தங்களுக்கு எல்லா பாக்கியங்களும் தரட்டும்....