> >

Friday, November 26, 2010

எண்ணப் பறவைகள்

அன்று தான் அந்த பள்ளிக்கூடத்தின் ஆரம்ப தினம் ஒவ்வொரு கிளாஸிலும் புதிது புதிதாய் பல ஊர்களிலிருந்தும் அந்த பள்ளிக்கு மாணவிகள் படிக்க வந்திருந்தார்கள் அது ஒரு தனியார் பள்ளி மட்டுமல்ல அதன் கல்வித்தரமும் நன்றாக இருந்ததும் ஒரு காரணம்
வகுப்பறையில் நுழைந்தார் வகுப்பு ஆசிரியை எல்லோரையும் தங்களின் பெயர், ஊர், படித்தப்பள்ளி ஆகியவற்றை சொல்லச் சொன்னார் ஒவ்வொருவராக சொல்லிமுடித்தார்கள். அந்த பீரியடுக்கான பெல் அடிக்க கிளாஸிலிருந்து கிளம்பிச்சென்றார் ஆசிரியை.
ஹலோ ஐ ஆம் சரிதா என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் கையை நீட்டினாள். ஹாய் என்று கைக்கொடுத்தாள் சமீரா.
பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டார்கள், நாட்கள் சென்றன இவர்கள் இருவர் தம்மிலும் ஒரு ஆத்மார்த்த நட்பு வளரத் தொடங்கி இருந்தது. இருவரும் தங்களின் வகுப்பு முடிந்ததும் யாராவது ஒருவர் வீட்டிற்கு சென்று தங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது, இத்தனைக்கும் இருவரும் படிப்பது என்னவோ ஆறாம் வகுப்பு தான். வீட்டில் எது செய்திருந்தாலும் அதை இருவரும் பள்ளிக்கு வந்ததும் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள் அன்றும் அதுப்போலத்தான் சரிதா தான் கொண்டு வந்திருந்த அந்த சாக்லெட்டை தன்வாயில் வைத்துக் கடித்து பாதியை சமீராவிடம் தந்தாள்
வேணாம்ப்பா இன்னிக்கு நான் நோன்பு வச்சிருக்கேன் என்றாள் சமீரா.
தான் கொடுத்ததை வாங்காததால் சரிதாவின் முகத்தில் திடீர் கோபம் அதனால் அவள் சமீராவிடம் பாத்தியா நீ எத்தனைத் தடவை இப்படி கடிச்சி கொடுத்ததை தின்னுருக்கேன் ஆனா இன்னிக்கு நான் கொடுத்ததை எச்சில் பட்டிருக்கும்னு தான நீ வாங்கி தின்னல என்று கோபமாய் கேட்டாள் சரிதா.
இல்லப்பா இன்னிக்கு நான் நோன்பு பிடிச்சிருக்கேன் அதனால தான் என்று சமீரா சொன்ன போதும் அவள் சட்டைச் செய்யாமல் வேறு இடம் மாறி உட்கார்ந்தாள் சரிதா. பள்ளி விட்டதும் இருவரும் முகம் திருப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்ததும் கோபமாக புத்தகப்பையை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள் சரிதா. அவளின் இச்செய்கையைப் பார்த்துவிட்டு அவளின் தாய்
ஏய் சரிதா என்னாச்சுடி உனக்கு புத்தகப்பையை ஏன் இப்படி தூக்கி விசுற
இன்னிக்கு சமீரா என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா
உங்களுக்குள்ள என்னடி சண்டை
இன்னிக்கு காலைல அவளுக்கு காட்பரீஸ் சாக்லெட்ல பாதிய கடிச்சு கொடுத்தேனா எப்போதும் வாங்கிக்குற அவ இன்னிக்கு வாங்கிக்க மாட்டேன்னு சொல்லி என்னை நோஸ்கட் பண்ணிட்டாம்மா.இனிமே அவக்கூட பேசவேமாட்டேன் என்றாள்.
அவ உன்கிட்ட வாங்காம இருந்ததுக்கு எதாகிலும் காரணம் இருக்கும்டி
நான் கேட்டேனே
அதுக்கு அவ என்ன சொன்னாடி
பாஸ்டிங்காம்
ஓ இது தானா முஸ்லிம்ஸ் ஒரு மாசத்திற்கு நோன்பு இருப்பாங்கடி அதனால அவங்க எதுவும் சாப்பிட மாட்டாங்க இதுக்குப போயா கோவிச்சுக்கிட்ட
பாஸ்டிங்னா என்னம்மா
அதுவா நாம விரதம்னு இருப்போம்ல அதுப் போல தான் இதுவும் நாளைக்கு சாரி கேட்டுட்டு ஒன்னா இருக்கனும் புரியுதா என்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் அமர்ந்திருந்தாள் சமீரா
என்னம்மா ஏன் இப்புடி உட்கார்ந்திருக்கே உடம்பு கிடம்பு சரியில்லையாம்மா
இல்லம்மா இன்னிக்கு நான் நோன்பு வைச்சிருந்தேன் இல்லையா சரிதா இன்னிக்கு காலைல என்னை திங்க சொல்லி காட்பரீஸ் சாக்லெட்டை கொடுத்தா நான் வாங்கிக்கல அதனால என்னிடம் சண்டைப் போட்டுட்டு வேற பெஞ்சில் போயி உட்காந்துட்டா
நீ சொல்லலையா இன்னிக்கு நான் நோன்புன்னு
சொன்னேனே ஆனா அவ அதை எல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லம்மா.

காலைல ஸ்கூல் போனதும் அவகிட்ட சாரி கேட்டு ஹேண்ட் சேக் பண்ணிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்றாள் சமீராவின் தாய்.
காலையில் எதிரெதிராய் இருவரும் இருவர் வாயிலிருந்தும் சாரி என்ற வாசகம்
பாஸ்டிங்னா எதுவும் சாப்பிட மாட்டியா நீ
ஏர்லி மார்னிங் 3.30க்குப் முன்னாடி சாப்பிடுவோம் அதுக்குப் பிறகு ஈவினிங் 5.30க்கு தான் சாப்பிடுவோம்.
இடையில் தாகம் எடுத்தா என்ன செய்வே
சொட்டுத் தண்ணிக் கூட குடிக்கமாட்டேன்
நீ பொய் சொல்றே கிட்டத்தட்ட 13 ஹவர்ஸ் ஒரு ஆளால எப்படி பச்சத் தண்ணிக் கூட குடிக்காம இருக்கமுடியும் .இன்பாஸிபிள் யாருக்கும் தெரியாம நீ தண்ணிக்குடிச்சிடுவே
யாரும் பார்க்கல என்கிறது சரி ஆனா இறைவன் பார்த்துக்கிட்டு இருக்கானே என்று சமீரா சொன்ன போது சரிதாவிறகு எதுவம் சொல்லத்தெரியவில்லை.நம்பவும் முடியவில்லை. மாலை வீட்டிற்கு வந்தாள் சரிதா
அம்மா
என்னடி
உன்னால தேர்டீன் அவர்ஸ் சாப்பிடாம தண்ணிக்கூட குடிக்காம இருக்கமுடியுமா
நோ சான்ஸ்
அப்ப என்னால இருக்கமுடியும்னு சமீரா சொல்றாளே அப்பாக்கூட விரதம்னு இருப்பாங்க ஆனா இடையில தாகம் எடுத்தா தண்ணி குடிப்பாங்க அப்படீன்ன இது என்ன விரதம் என்றாள்
சில சமயம் பதில் சொல்லமுடியாத கேள்விகளை குழந்தைகள் கேட்டுவிட்டால் கோபத்தை தான் பதிலாக காட்டுவார்கள் இதைத் தான் சரிதாவின் அம்மாவும் செய்தாள்.
அதிகப்பிரசங்கித் தனமா எதுவும் பேசம சும்மா படுடி என்று வாயை அடைத்தாள்
அம்மா
என்ன
நாளைக்கு பிரைடே இல்லையா அதனால
அதனால என்ன
நான் சமீராவின் வீட்டுக்குப் போயிட்டுவர்ரேம்மா
சரி போயிட்டுவா என்று அனுமதி தந்தாள் அம்மா
வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவிட்டதும் சரிதாவும் சமீராவும் ஒன்றாய் சமீராவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்
ஹேய் சரிதா எத்தனை நாளாச்சு உன்னைப் பாரத்து இப்பத்தான் உனக்குத் தோனிச்சா இங்க வர்ரதுக்கு எப்படி இருக்கே நல்லா இருக்கியா என்று அன்போடு அரவணைத்தாள் சமீராவின் தாய்
நல்லா இருக்கேன் ஆண்ட்டி நீங்க எப்படி இருக்கீங்க என்றாள் சரிதா
அதற்குள் நோன்புத் திறப்பதற்கான நேரம் நெருங்க இப்தாருக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் சமீராவின் தாய்
நோன்பு திறந்து முடிந்ததும் சற்று நேரம் பள்ளிக்கூட விசயங்க
ளைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள் அதன் பின்னர் சமீராவின் வீட்டிற்கு அடுத்தவீட்டுப் பெண்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்
சமீரா என்னடி இவ்வளவு லேடீஸ் வர்ராங்க
நைட் பிரேயர் இங்கு நடக்கும் அதுக்குத் தான் வந்திருக்காங்க
இரவுத் தொழுகை முடிந்தும் அங்கிருந்தவர்களுக்காக ஒரு சிற்றுரை நிகழ்த்தினாள் சமீராவின் தாய்.
அங்கு நடந்தவைகள் அத்தனையையும் கூர்மையாக செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரிதா அது அவளின் பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல பதிந்தும் போனது.
மேலும் அவர்கள் மூன்றுவருடம் அந்தப் பள்ளியில் ஒன்றாய் படித்தார்கள் சரிதாவின் தந்தைக்கு டிரான்ஸ்பர் வர சரிதாவும் இடம் மாறிப்போனாள் அதன் பிறகு இருவரின் வாழ்க்கையும் மாறிப்போய் விட்டது.
இப்படியாக சுமார் பதினைந்து வருடங்கள் கழிந்திருக்கும் அன்று திருச்சிப் பஸ் ஸடாண்டில் நின்றுக்கொண்டிருந்தாள் சமீரா அவளின் கையில் அவளின் மகன் அஸ்ஹர். தான் போக வேண்டிய கருணாநிதி நகர் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்தாள் சமீரா அந்த நேரம் புர்கா அணிந்து தன் கையில் ஓரு கைக் குழந்தையுமாய் இறங்கினாள் அந்தப் பெண் அவள் முகத்தை பாரத்ததும் இவளை எங்கோ எப்போதோ பார்த்திருக்கின்றோம் என்ற எண்ணம் உதிக்க அடுத்த நிமிடம் பளிச்சென்று அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது அவள் சரிதா என்று. எப்படி அவள் புர்கா அணிந்திருக்கமுடியும் அவள் உண்மையில் இந்து அல்லவா ஒரு சமயம் நமது கணிப்புத் தவறோ என நினைத்தாள். நேராக அவளைக் கேட்டுவிடலாமா என்று நினைத்தாள். எப்படி கேட்க முடியும் உங்கள்பெயர் சரிதாவா என்று கேட்கத்தான் முடியுமா
இப்படி நினைத்து நிற்கையில் அவளே சமீராவின் அருகில் வந்து எக்ஸ்கியூஸ்மி கருணாநிதி நகர் போற பஸ் எப்ப வரும் என்றாள்
அதுக்குத்தான் நானும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்ற தோடு அவர்கள் இருவரும் ஓருவர் முகத்தை ஓருவர் பார்த்துக் கொண்டார்கள்.
நீங்க பாக்குறதுக்கு என்னோட கிளாஸ்மெட் ஓருத்தி சரிதான்னு பேரு அவளைப் போலவே இருக்கீங்க என்றாள் சமீரா
அப்படியா ஆச்சரியமா இல்ல இருக்கு இத்தனை வருசமாவா நினைப்புள வச்சிருக்கீங்க என்றாள் அவள்
இல்லைன்னா இப்ப உங்களைப் பார்த்ததும் அவளோட நினைப்பு வருதுன்னா அவக்கூட நான் எப்படி பழகி இருப்பேன்
ஆமாம் சமீரா உன்னைப் பார்த்து என்றதும்
என்ன சொன்னீங்க சமீராவா என் பேரு உங்களுக்கு எப்படி
ஏய் சமீரா நான் பஸஸைவிட்டு இறங்குறப்பவே உன்னை பார்த்துட்டேன் நான் புர்காவுல இருக்கிறத பார்த்துட்டு நீ குழம்பி நின்னதையும் பார்த்துட்டுத்தான் நானே வந்தேன்
என்றதும் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் அவளை கட்டிப் பிடித்தாள்.
என்ன நீயும் கருணாநிதி நகர்ல தான் இருக்கியா
இல்ல நான் காஜா நகர்ல இருக்கேன்
சரி நாம இப்ப என் வீட்டுக்குப் போறோம் அம்மா பார்த்தாங்கன்னா சர்ப்ரைஸா இருக்கும் வா போகலாம் என்று ஓரு ஆட்டோவைப் பிடித்தாள் பதினைந்து நிமிடத்தில் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த கதவைத்திறந்தாள் சமீராவின் அம்மா.
அம்மா வாசலுக்கு வாங்களேன் யார் வந்திருக்கானு பாருங்க என்றாள் சமீரா அதற்குள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்
யாருஇது உங்களுக்குத் தெரியுதா என்றால் சமீரா தன் தாயைப் பார்த்து
அவள்முகத்தைப் பார்த்த அடுத்த வினாடியே அவளை இனம் கண்டு இது சரிதா போல இருக்கு ஆனா இந்த புர்கா தான் என்று நிறுத்தினாள் சமீராவின் தாய்
கரெக்டா சொல்லிட்டீங்க எனக்கும் எப்ப எப்படி நடந்ததுன்னு தெரியல
இருவரும் அவளின் பதிலுக்காக சரிதாவின் முகத்தைப் பார்த்தார்கள்
ஆண்ட்டி இப்ப நான் சரிதா இல்ல என் பேரு சஹீதா இனிமே நான் எப்படி தூய இஸ்லாத்தை ஏத்துக்கிட்டேன் எங்கிறத சொல்லிடுறேன்.
சஸ்பென்ஸ் இல்லாம சீக்கிரம் சொல்லுமா என்றாள் சமீராவின் தாய்
உங்களுக்கு நெனப்பு இருக்கா அன்னிக்கு ஒரு நாள் புனித ரமலான் மாத்தத்துல உங்க வீட்டிற்கு வந்தேன் இல்லையா
ஆமா எனக்கு நெனப்பு இருக்கு
அன்னிக்கு நீங்க தொழுத விதமும் அதுக்குப் பின்னாடி நீங்க செஞ்ச சின்ன லெக்சரும் என் மனதுல ஆழமா பதிஞ்சிடுச்சு இறைவன் என்றால் யார் என்பதும் அவனுடைய தூதர் யார் என்கிறதையும் இறைவனைஎப்படி வணங்கவேண்டும் எனகிறதை யும் நீங்க பேசினீங்க இல்லையா அன்னைக்கு என் மனதுல ஒரு தேடுதல் ஆரம்பமாயிடுச்சு அதன் பிறகு அப்பா டிரான்ஸ்பர் ஆனபிறகு சென்னைக்கு வந்திட்டோம் அப்புறம் காலேஜூக்கு பிறகு ஜாப் தேடி திருச்சிக்கு வந்தேன் அங்க தான் இக்பாலை பார்த்தேன் அவரோட பிகேவியர் எனக்குப் பிடிச்சிருந்தது நேரடியா அவர்கிட்ட என்னை திருமணம் செஞ்சிப்பீங்களா என கேட்டேன் அவர் சொன்ன ஒரே வார்த்தை நான் ஒரு முஸ்லிம் அதனால எனக்கு வரப்போற பெண் முஸ்லீமாக இருக்கனும்னு விரும்புகிறேன் என்றார்.
அப்புறம் நடந்ததை.அப்படியே சொல்றேன்
நான் ஒரு முஸ்லிம் நீங்களோ இந்து நமக்குள்ள எப்படி திருமண ஒப்பந்தம் சரியாவரும்
மதம் தான் தடை என்றால் நான் மாறிடுறேன்
இது நீங்க திடீர்னு எடுக்கிற முடிவு பக்குவமா இருக்காது. அது வாழ்க்கைக்கும் சரியா வராது
அப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க
உங்க வழி உங்களுக்கு என்வழி எனக்கு
காதல் வழி பார்த்து வர்ரதில்லையே
நீங்களே ஒரு டிராக்கை உருவாக்கிக்கிட்டு அதுக்கு நீங்களே ஒரு விளக்கமும் கொடுத்துகிறீங்கன்னு சொல்லிட்டார் ஆனா எனக்கு தூக்கம் வரல இவர் வேண்டாம் வேண்டாமுன்னு நகர்ந்து போறப்ப தான் எனக்கு அவர்மேல அதிகம் அதிகமா விருப்பம் ஏற்பட ஆரம்பிச்சது அதன் பின்னாடி நான் இஸ்லாம் சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன் இஸ்லாத்தை விரும்பி ஏத்துக்கிட்டேன் இக்பாலையும் வாழ்க்கைத்துணையா அல்லாஹ்வின் அருளால அடைஞ்சேன்.
உன் வீட்டுல பிரச்சினை ஏற்பட்டிருக்குமே
ஏற்பட்டுச்சுதான் என்னோட பிடிவாதம் கடைசியில ஜெயிச்சது
உன் குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கே
சமீரான்னு உன் பெயர் தான் வச்சிருக்கேன்
இதைச்சொன்ன அடுத்த நிமிடம் சமீராவின் அம்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க என்னவென்றுத் தெரியாமல் இருவரும் பதறினார்கள்.
நாம் செய்யிற சின்னச்சின்ன அமல்கள் கூட ஒருவரை இந்த அளவுக்கு ஈற்கிறது என்றால் இஸ்லாத்தின் ஆழ்ந்த கருத்துகளை மக்களுக்கு எத்தி வைத்தால் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்ற சிந்தனை ஏற்பட்டதால் வந்த ஆனந்த கண்ணீர், என்பது புரிந்ததும் நிம்மதி அடைந்தார்கள்.

Thursday, October 7, 2010

மாறியது நெஞ்சம்

அந்த இருவரும் கல்லூரி தோழிகள் ஆனாலும் அவர்களுக்குள் தினம் தினம் தர்க்கம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கும். இன்றும் அவர்களுக்குள் தொடங்கியிருந்தது அந்த விவாதம் இருவரும் விடாகண்டர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு இனம் தெரியா ஆத்மார்த்தமான சினேகம் மதங்களைக் கடந்த அன்பு என்று கூட அதைச் சொல்லாம்.

-இன்னிக்குப் பேப்பரைப் பாத்தியா என்றாள் நிவிதா
-என்ன சேதிய புதுசா படிச்சே என்றாள் நாதிரா
-என்னத்த இருந்தாலும் உங்க சமுதாயம் ரொம்ப மோசம்பா
-ஆரம்பிச்சுட்டியா உன் கண்ணுல இன்னிக்கு என்ன தெரிஞ்சது
-பெண்கள் எல்லாரும் சமுதாயத்தோட கண்கள் என்று சொல்லிக்கிறீங்க ஆனா பேசறது ஒன்னு செய்யிறது ஒன்னா இல்ல இருக்கு.
-ஏய் சொல்லுறத நேரடியா சொல்லு சுத்தி வலைக்குறது எல்லாம் வேண்டாம் என்றாள் நாதிரா
-இதுக்கு மட்டும் குரைச்சல் இல்ல
-பாத்தியா குத்திக்காட்டுறத விட்டுட்டு சேதிய சொலலுப்பா முதல்ல
-இன்னிக்கு ஆல் இனடியா முழுதுக்கும் ஒரேப் போராட்டமா இருக்கு ஆனா உனக்குத் தெரியலேங்கிற . சரி நான் நேரடியாவே கேக்குறேன் பெண்கள் என்றால் அடிமைகள்ன்னு நினைச்சுட்டாங்களா உங்க சமுதாயத்துல
-புரியும் படியா சொல்லு இல்லன்னா சொல்லாதே என்றாள் நாதிரா
-நான் இன்னிக்கு விடுறதா இல்ல என்றாள் நவீதா
-என்னைத்திட்ட வர்ரேன்னு தெரியுது ஆனா எதுக்காக என்னைத் திட்டவர்ரேன்னு புரியில
-தல்லாதவயதுல ஓரு ஆளு தலாக் சொல்லி மனைவிக்கிட்டே இருந்து விவாகரத்து வாங்கி இருக்கான் அதுக்கு உங்க சமுதாய முல்லாக்கள் வாங்கியும் கொடுத்துட்டாங்க ஆனா அந்த மூதாட்டி எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஓட்டும் அதுக்கு ஜீவனாம்சம் தராம. அந்தம்மா கோர்ட்டுக்குப் போயிடுச்சு தீர்ப்பும் அந்தம்மாவுக்கு சாதகமா வந்திடுச்சு அதுக்குப் பிறகு உங்க ஆட்கள இந்த தீர்ப்புக்கு எதிரா கொடிபிடிச்சிருக்காங்க இது எந்த வகையில நியாயம் என்றாள் நவீதா
-ஓ இது தான் உன் கோபத்துக்குக் காரணமா
-நான் எவ்வளவு சீரீயஸா ஓரு சேதிய சொல்றேன் நீ நக்கலடிக்கிறியா என்று கோபமானாள் நவீதா
-கூல் டவுன் யா என்று அவளை இன்னும் வெறுப்பேற்றினாள் நாதிரா
-இது உனக்கு சில்லி மேட்டரா தெரியுதா இது ஒட்டு மொத்த பெண்களோட கௌரவப்பிரச்சினை மாத்திரமில்ல இதுக்கு எதிரா யார் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணோட கடமையும் கூட என்று ஆவேசமானாள் நவீதா
-அதாவது ஒருபெண்ணை விவாகரத்து செய்யிற ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு நிச்சயமா ஜீவனாம்சம் கொடுத்தே தீரனுமனு நீ சொல்ல வர்ரே அது தானே.
-ஆமாம் இதில் என்ன சந்தேகம் இருக்கு
-அப்போ அவன் எது வரைக்கும் கொடுக்கனும்
-அவள் சாகுறவரைக்கும் கொடுக்கனும் என்றாள் நவீதா
-நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே
-ம் சொல்லு
-ஒருத்தி தன் கணவனே வேண்டாம்னு பிரிஞ்சுடுறான்னா அதுக்கு என்ன அர்த்தம்
அவனோட செயல்பாடோ இல்லைன்னா அவனோட கேரக்டரோ அவளுக்குப் பிடிக்காமத்தான் பிரியணும்
-அவனும் வேணாம் அவனோட நினைவும் வேண்டாமனு பிரியிறா ஒருத்தி அப்படி இருக்கிறப்போ மாசம் மாசம் அவன் கிட்ட ஒரு பிச்சைக்காரிப்போல கையேந்தி நிக்கச் சொல்றியே இதுக்குப் பேர்தான் பெண்ணுரிமையா அந்த மாதிரி செயலுக்கு பெயர் தான்உரிமையா இதைத் தான் நீ விரும்புறியா
-பின்ன பெண்களோட சுதந்திரத்தை எப்படி பெறுவது
-நான் தெரியாம கேட்கிறேன் அவன் வேண்டாம் அவனோட பணம் மட்டும் வேணும்னா அதுக்குப் பேர் ஜீவனாம்சமா இல்ல வேறு எதுவுமா என்றாள் நாதிரா
-நீ என்ன சொல்ல வர்ரே என்றாள் நவீதா
-இன்னிக்கு ஸ்டவ் வெடிச்சு பல பெண்கள் உயிர் இழந்திருக்காங்கன்னு பேப்பர்ல பாத்திருக்கிறியே இது எல்லாம் உண்மையிலேயே நடந்ததா இல்ல நடத்தப்பட்டிருக்கிறதான்னு நீ யோசிச்சுப் பார்த்திருக்கியா
-அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
-ஆயிரம் சம்பந்தம் இருக்கு
-என்ன சொல்றே
-புடிக்காத மனைவிய குடும்பமா சேர்ந்து கொலைப் பண்ணிட்டு அது ஸ்டவ் வெடிச்சதா நம்ப வைக்கிற விவகாரம் தான் நடந்துகிட்டு இருக்கு அப்படி இல்லைன்னா இந்தியாவுல உற்பத்தி செய்யிற ஸ்டவ் எல்லாமே டூப்ளிகேட் என்று சொல்லவர்ரியா
-என்னை ஏம்பபா குழப்புறே என்றாள் நவீதா
-விவாகரத்து வாங்கிட்டு அவள் தன்னைவிட்டு வெளியேப் போனால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கனும்ங்கிறதுக்காகவே நடத்தப்படுற அப்பட்டமான கொலைகளாத்தான் இதை நான் பார்க்கிறேன் என்றாள் நாதிரா
-அப்போ உங்க மதம் என்னதான் சொல்லுது என்றாள் நவீதா
-முஸ்லிம்களைப் பொறுத்தவரை திருமணம்ங்கிறது ஒரு ஒப்பந்தமாதான் பேணப்படுது கணவன் மனைவிக்கு ஆடையைப் போல இருக்கனும்னு சொல்லுது என்றாள் நாதிரா
-பாத்தியா பெண்ணடிமைத்தனத்தை கணவன் மனைவியை அடிமைப் படுத்த இதைவிட வேற வார்த்தை வேனுமா என்றாள் நவீதா
-நான் முடிக்கிறதுக்கு முன்னாடி ஏம்பா முந்திக்கிறே மனைவியும் அப்படி இருக்கவேண்டும்னு தான் இஸ்லாம் சொல்லுது என்றாள்
-அப்போ ஒரு பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஆசை அறுபது நாள மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி அவள கல்யாணம் செஞ்சிட்டு அவளை அம்போன்னு விட்டுட்டுப் போகறதுக்குப் பேர் தான் திருமண ஒப்பந்தமா என்றாள் நவீதா
-இப்பத்தான் ரூட்டுக்கே வந்திருக்கே என்றாள் நாதிரா
-என்ன ரூட் என்றாள் நவீதா
-நல்லா கேட்டுக்கோ ஒருபெண்ணை ஒருத்தன் திருமணம் செய்றான்னா அது ரிக்கார்டு செய்யிறது எங்க பஞ்சாயத்துல வழக்கமா இருக்குற ஒன்னு அது போல அவன் அவளை விவாகரத்து செய்யிறான்னு வச்சுக்கோ அவனுக்கு ஒரேத் தடவையில கொடுத்துட மாட்டாங்க மேகஸிமம் மூனு தடவை யாச்சும் அவங்களை சேரத்துவைக்கிற நடவடிக்கையை மேற் கொள்ளுவாங்க இதுவும் சரியா வரலைன்னா தான் விவாகரத்தே கொடுப்பாங்க அப்படிக் கொடுக்குறப்ப அவன் வரதட்சினையா வாங்கின எல்லாத்தையும் அந்தப் பெண் திருப்பி எடுத்துக்கிட்டு போயிடுவா அதோடு அவ வாழ்க்கை நடத்த தேவையான ஒருத் தொகையை அந்த ஸ்பாட்டிலேயே வாஙகிக் கொடுத்துட்டு இனி அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு முடிச்சுடுவாங்க அதன் பிறகு அவள் விரும்பினாள் வேறு ஒரு கல்யாணம் செய்யிறதுக்கு அவளுக்கு உரிமை இருக்கு இத தடுக்க முன்னாள் கணவனஃமுயற்சித்தாலும் முடியாது என்றாள் நாதிரா
-இவ்வளவு இருக்கா இந்த விசயத்துல ஆமா இது எல்லாமும் எப்படி உனக்குத் தெரியம் என்றாள் நவிதா
-எங்க வேதத்துலேர்ந்து தான் படிச்சேன்
-என்னது வேதத்துலயிருந்தா என்று அதிரச்சியாக கேட்டாள் நவீதா
-கல்யாணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்றும் அது சொர்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னும் சொல்லுறாங்களே என்றாள் நவீதா
-இப்படி நடக்குற கல்யாணததுல தான் விவாகரத்தும் நடக்குது
-எனக்கு புரியலடி என்றாள் நவீதா
-அதனாலதான் இவ்வளவு கோபம் உன்கிட்ட என்றாள் நாதிரா
.வேதம் என்கிறது வாழ்க்கையின் வழிகாட்டி அத எல்லாரும் படித்துணரனும் அப்போதான் என்னன்னு அர்த்தம் விளங்கும்
-அப்போ பெண்கள் வேதத்தை படிக்கலாமா என்றாள் நவீதா
-பாத்தியா எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசத்தை நீ உன்னோட மத வேதத்துல இருந்து ஒரு வார்த்தையைக்கூட கத்துக்கல ஆனா நான் முழுமையா எங்கட வேதத்தைப் படிச்சிருக்கேன் இப்பச் சொல்லு பெண்ணுரிமை எங்கே இருக்குன்னு என்றாள் நாதிரா
-வாய் மூடியிருந்தாள் நவீதா
-ஏகம் ப்ரஹம் அத்வம் நாஸ்தே நஹ்தே கிஞ்சண் அப்படின்னா என்னான்னு உனக்குத் தெரியுமா நவீதா என்றாள் நாதிரா
-ஏதோ மந்திரத்தைச் சொல்றமாதிரி இருக்கு என்றாள் நவீதா
-பாத்தியா இது உங்களோட வேத வரிகள் இதுக்கு அர்த்தம் கடவுள் ஒருவன் அவனுக்கு நிகரில்லைன்னு அர்த்தம் அதைத்தான் எங்க வேதம் லாயிலாஹா இல்லல்லாஹ் என்று சொல்லுது இதுபுரியாமா பலர் பலவிதமா எழுதுறாங்க பேசுறாங்க இத பாக்குற உன்னைப் போல பல பேர் இப்படி குன்டக்க மண்டக்க புரிஞ்சுக்கிட்டு கோபப்படுறாங்க என்றாள் நாதிரா
-சாரிப்பா உங்க வேத த்தை நான் பார்க்கலாமா என்றாள் நவீதா
-என்ன பாக்கலாமாவா படிக்கவே செய்யலாம் நாளைக்கு உனக்கு கொண்டுவந்துத் தருகின்றேன் என்ற போது நவீதாவின் முகத்தில்
ஒரு மலர்ச்சியின் அடையாளத்தை பார்த்தாள் அது என்னவாக இருக்கும் ?

Monday, August 18, 2008

சுமைதாங்கியின் வலி (தொடர்ச்சி)

- இப்போ இந்த இராத்திரி நேரத்தில் எங்கேன்னா போறேள் என அவரின் மனைவி
கேட்டாள்.
- தூக்கம் வரலடி. வெளியே ஒலிபெருக்கியில் ஏதோ பேசின்டு இருக்காள். அதைக் கொஞ்சம்
கேட்டுண்டு வந்தா மனசு பாரம் குறையும்.

- சித்த இருங்கோ நானும் வர்ரேன்.

இருவரும் மாடி ஏறினார்கள். ஒலிபெருக்கியின் சப்தம் இப்பொழுது துல்லியமாக காதில் விழுந்தது.

அது இஸ்லாமியர்களின் தெருமுனைப் பிரச்சாரம். அதன் சாரம்சமானது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களின் வயதான தாய்,தந்தையரை மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். உங்களின் தாயின் காலடியில் சொர்க்கம் இருப்பதை மறந்து விடாதீர்கள். இப்படி கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன் தந்தையை பார்த்ததில்லை. பிறந்த சில வருடங்களிலேயே தாயையும் இழந்து அனாதையாக இருந்தவர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

பெற்றோர்களைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான், மனிதனுக்கு அவர்களின் பெற்றோர் குறித்து விவரித்துள்ளோம். அவனை அவன் தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாக சுமந்தாள். அவனுக்கு இரண்டு வருடம் பால் புகட்டனாள், எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செழுத்துவாயாக என்னிடமே உங்களின் திரும்புதல் உண்டு.

இதுமட்டுமல்ல அன்புக்குரியவர்களே! மேலும் கூறுவதைக் கேளுங்கள். அன்பு, பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. சிறுவனாக இருக்கும் பொழுது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக என்று பிரார்த்தனைச் செய்யச் சொல்கின்றான்.

மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக கருதாதீர்கள். பெற்றோர்க்கும், உறவினர்க்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இருவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரின் மனைவி தன் கணவரிடம்

- என்னன்னா நம்ப பிரச்சினையைப் பற்றி பேசிண்டு இருக்கா?

- ஏதோ முஸ்லிம்களின் பிரச்சாரம் போல இருக்குடி. உன் புள்ளை மேடையில் பேசினானே
கேட்டியோ? முஸ்லிம்கள் இந்த முதியோர்கள் இல்லத்தில் இல்லாததை கண்டு
வருத்தப்பட்டான் இல்லையோ? அதற்காண காரணம் எனக்கு இப்பத்தான்டி விளங்குது.

- என்னத்த புரிஞ்சுண்டேள்.

- ஒருத்தரோட வாக்கும், அவர் சொன்ன வேதமும் இத்தனை வருசமா
கடைபுடிக்கிறாங்கன்னா? அதில் உயிரோட்டமும், சத்தியமும் இருக்குன்னுதானடி அர்த்தம்?
இதெல்லாம் நமக்கு புரியாம போச்சே? எல்லாம் சரியா புரிந்திருந்தா இப்படியொரு நிலை
நமக்கு ஏற்படாமலே இருந்திருக்கும் இல்லையா?

- ஏதேதோ பேசரேள். வேதங்கள் எல்லாம் நல்லது தான் சொல்லது அதன்படி
நடக்குனுமோன்னா.

முற்றும்.

சுமைதாங்கியின் வலி

சுமைதாங்கியின் வலி

அந்த முதியோர் இல்லம் 25 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருக்க விழா கதாநாயகனாக அமெரிக்காவிலிருந்து ஒரு பிரமுகர் வருகைத் தந்திருந்தார். ஒவ்வொருவரும் இந்த இல்லத்தின் வளர்ச்சி குறித்து ஒவ்வொருவிதமாக சிலாகித்துப் பேசினார்கள். தொடங்கப்பட்ட காலத்திலிருந்த நபர்களின் எண்ணிக்கையையும், இன்று அதன் வளர்ச்சியால் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்ற கணக்கையும் சொல்லி முடித்தார்கள். கடைசியாக பேச எழுந்தார் அந்த அமெரிக்க பிரமுகர்.

பெரியோர்களே! இந்த மாதிரி முதியோர்கள் இல்லம் தொடங்கப்பட்ட பின்புதான் எங்களைப் போன்றவர்கள் நிம்மதியாக வெளிநாட்டில் வாழ்வை கழிக்க முடிகின்றது. வயதான பெற்றோர்களை கவனிக்க நேரம் இன்றி வாழ்கின்றோம். அதனால்தான் பெற்றோர்களை இந்த முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டுச் செல்கின்றோம். வீட்டில் இருப்பதை விட இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உங்களின் முகங்களைப் பார்த்து உணர்கின்றேன். பெற்றோர்களை இந்த இல்லங்களில் விட்டுச் செல்வதை ஒரு கவுரவக் குறைச்சலாக நான் கருதவில்லை. வீட்டில் கிடைக்கும் நிம்மதியை விட இங்கு நிம்மதியாக இருக்கின்றீர்கள். வெளிநாடுகளில் கூட இதுபோன்ற முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அதை அரசாங்கமே ஏற்று நடத்துகின்றது. ஆனால் இங்கு தனியார் துறை எடுத்து நடத்துகின்றார்கள். அவ்வளவுதான் வித்தியாசமே. நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு குறை உள்ளது. அதாவது நமது நாட்டில் எல்லா சமயத்தவர்களும் வாழ்கின்றோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மட்டும் இம்முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தேடி வருவதில்லை. அப்படிப்பட்ட இஸ்லாமியர்களையும் இவ்வில்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆவலாகும். இதை ஒரு கோரிக்கையாகவே உங்களிடம் நான் இந்நேரத்தில் வைக்கின்றேன். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறி அமர்ந்தார். அந்த இல்லத்தில் இருப்பவர்களை விட அழைப்பின் பேரில் வருகைத்தந்தவர்களின் கைதட்டல் பலமாக இருந்தது. விழாவும் இனிதே முடிந்தது.

அந்த அமெரிக்க பிரமுகர் பத்தாம் எண் அறைக்குள் நுழைந்தார். அங்கே அவரின் தாய், தந்தையர்கள் அமர்ந்திருந்தர்கள். இவர் அவர்களிடம்,

- என்னப்பா எப்படி இருக்கேள் ஷேமமா இருக்கேளோன்னோ?

- ம் நல்லா இருக்கோம்பா.

- உங்களை நன்னா கவனிச்சுக்கிறா தானே?

- ஓ நன்னா கவனிச்சுக்றாங்கபா.

- அதுதானே பார்த்தேன். நான் இருக்றச்சே நீங்க கவலைப்பட வேண்டாம். என்ன
வேண்டுமென்றாலும் என் கிட்ட கேளுங்கோ. நான் இங்குள்ளவாளுடன் கூறி
உங்களுக்காண தேவைக்கு ஏற்பாடு செய்கின்றேன். எனக் கூறியவாறே தனது கை
கடிகாரத்தை பார்த்தார்.

- என்னப்பா வேலை எதுவும் இருக்கா மணியைப் பார்க்குறே?

- ஆமாம்பா. பிளைட்டுக்கு டயம் ஆயிடுத்து. சென்னையிலிருந்து டெல்லிக்கு பத்து மணிக்கு பிளைட். என் பால்ய சினேகிதன் டெல்லியில் இருக்கான் அவன் கூட இரண்டு நாட் தங்கிட்டு உடனே அமெரிக்கா கிளம்பனும். உங்களைப்பார்க்கவே இந்த புரோகிராமுக்கு ஒத்துக்கிட்டேன். நான் கிளம்புறேன். டேக் கேர் பை பை. என்று விடைபெற்றுக் கொண்டார்.

அறை வெறிச்சோடியது பழைய நிகழ்வுகளை அந்தப் பெரியவர் மனதிற்குள் போட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த அவர் மனைவி அவரைப்பார்த்து கேட்டார்.

- என்ன அப்படி வெறிச்சு பார்த்துண்டு இருக்கேள்?

- நோக்கு தெரியுமோல்லியோ அவன் பிறக்கறச்சே நீ எத்தனை பாடுபட்டேன்னு?

- தெரியும்ன்னா இப்போ அதுக்கு என்ன?

- அவன் பேசின்டு போனதை பார்த்தியாடி.

- கலி முத்திடுத்து. மனுசா பணம் பணம்னு பறக்குறா. இதுல இவன மட்டும் விதிவிலக்கா
பார்க்கமுடியுமோன்னோ?

- பணம் என்னடி பணம். இவன் அமெரிக்காவிற்கு போறச்சே நம்பன்ட என்னடி இருந்துச்சு.
என் தாசில்தார் பதவி, ஒரு வேலி நிலம் அதுதானடி நம் சொத்து. வி.ஆர்.எஸ்
வாங்கின்டு அந்த பூமியையும் வித்துட்டு தானே இவனை அமெரிக்காவிற்கு அனுப்பி
வைத்தோம்.

- நேக்கு தெரியரது. ஆனால், பிள்ளையாண்டான் மறந்துட்டானே.

- பெத்தவங்களையே மறந்து போறவன் சமயத்தில் நாட்டையும் மறந்துடுவான். பணத்திற்கு
வேண்டி நம்மை மறந்தவன். காசுக்காக எதையும் செய்வான். மனுசாலுக்கு பணமும்,
பதவியும் வந்துடுத்துன்னா பூமியில நிக்க மாட்டாடி. இங்க நம்ம கூட ரெண்டு நாள் கூட
இருக்க மாட்டானாம். பால்ய சினேகிதன் கிட்டே இரண்டு நாள் வாசம் பண்ணப்
போறானாம். போகட்டும், போகட்டும். அதுல வேற மேடையில் நம்ம நாட்ல எல்லா
சமயத்தாவாலும் வாழ்றாங்களாம். இந்த மாதிரி இல்லத்தில மட்டும் இஸ்லாமியர்கள்
இல்லை என்பது ரொம்ப வருத்தமாக போயிடுத்து இவருக்கு.

- பாவம் இஸ்லாமியர் அவங்க குடும்பம் புள்ளை, குட்டிகளோட இருக்குறது அவனுக்கு
புடிக்கலியோ என்னமோ என்றார் அவர் மனைவி.

- மனுசனுக்கு எண்ணம் போல வாழ்வுடி.

- சித்த சும்மா இருங்கோ. இரத்த கொதிப்பு அதிகமாகிடப் போறது.

- இரத்தக் கொதிப்பு மட்டும் இல்லைடி எல்லாமே ஏறிடுது. ஏன் வாழ வேண்டும் என்கின்ற
விரக்தியும் வந்துடுது.

- ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னுதான் வளர்த்தோம். ஆனால், அவன் நம்பல
நட்டாத்துல விட்டுட்டான். அவன நம்பி வாழலேன்னு நினைத்துக்க வேண்டியதுதான்.

- சத்தியமா அதுதாண்டி உண்மை. என்னோட பெண்ஷன் பணம் தாண்டி இப்போ நம்மை
காப்பாத்துது.

- விடுங்கோண்னா. அவனைப்பத்தி நினைத்து உடம்பை கெடுத்துக்காதேள்.

- முடியலடி. முடியல. நாம இவனை நன்னா படிக்கவச்சு அழகு பார்த்தோம். நாம நம்
கடமையை செஞ்சாமாதிரி அவன் அவன் கடமையை மறந்துட்டானடி. தனக்கு இதுபோல
வராதுன்னு நினைச்சுட்டான் போல. இந்தியாவுல வாழ்ந்த இவனுக்கே கூட்டு குடும்பத்த
பத்தின அறிவு இல்லைனா இவனோட புள்ளை குட்டிங்க அமெரிக்காவுலன வளருது
அதுங்களுக்கு எங்கேடி விளங்கப்போவுது. இவன் எட்டடி பாய்ந்தால் இவனோட புள்ளைங்க
பதினாறு அடி பாயப்போதுங்க.

- எத்தனை வாட்டி சொல்றது. கொஞ்சம் பேசாம இருங்கோண்ணா. இப்படி பேசின்டே
இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது.

மனைவியின் அதட்டலால் சிறிது வாய் மூடினார். அந்த இரவுநேர அமைதியில் எங்கிருந்தோ ஒலி பெருக்கியின் சப்தம் காதுகளில் அலை மோதியது. அது என்ன என கூர்ந்து கேட்கத் தொடங்கினார். அது மேடைப் பேச்சுப் போல இருக்க. அந்தப் பேச்சு அவரை வசீகரிக்க அதைக் கேட்கவும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கவும் மேல்மாடி நோக்கி நகரச் தொடங்கினார்.

தொடரும்...

Tuesday, January 22, 2008

பிச்சை

ஓ வானமே
உன் நீலநிற
புடவையின்
ஓரத்தை கிழித்துத்தா.
இங்கே
பூமியில்
ஜனநாயகத்தாய்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்.

Tuesday, January 15, 2008

வாழ்கிறதா? காதல்

மயிழிறகின்
வருடலாய்
என் மனதில் பூக்கும்
உன் வருகையால்
மகிழ்ச்சி.

ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்
என் மௌனம்
கலைத்த
உன்
ஒரு புன்னகை.

என்
கரம் பற்றி நடந்த
வேளைகளில்
தேவலோகம்
உன் கண்களில்.

ஏமாந்த நிமிடங்கள்
எத்தனை தெரியுமா?
உன் குரலொழிக்கும்
சலங்கை ஒலிக்கும்
வித்தியாசம் தெரியாமல்.

முட்பாதையில்
பயணம்
முடிவில்
முல்லை ரதம் என்றாய்.

காத்திருந்து காத்திருந்து
கரைந்து போனது
காலம்
கண்விழித்து கண் விழித்து
கவலை நோயானது
வாழ்வு.

வார்த்தைக்கு
வேண்டும் சத்தியம்
உன்னிடம் எதிர்பார்த்தவன்
பைத்தியம்
உன் வாழ்விற்கு
இதுவா முக்கியம்.

காதல்
சொல்லரங்கில்
உன் செவிகளில் உணவு
என் மனதினில்பசி
நீ
முல்லைரதம் ஏறி
எனக்கு
முட்களை பரிசளித்தாய்

பாழும் மனதில்
ஆசிட் தெளித்த
பின்பும்
வளர்கிறதே
நெருஞ்சி முள்.

சுவாசிக்க நினைத்தது
என் தவறோ
நீரின் உள்ளே.

நீந்த நினைத்தது
என் தவறோ
நெருப்பின் உள்ளே.

அழகை ஆராதித்ததும்
என் தவறோ
ஆபத்தின் உள்ளே.

காதல்தான்
வாழ்கிறது
காதலர்கள்.........?

Saturday, January 12, 2008

பொங்கல்

வைகறை வெயில்
பூமி வெடிப்பு
வயல்
வளர்த்த நாற்றில்.

மஞ்சள் செடிகள்
பூத்த வரப்பில்
நெருஞ்சி முட்கள்.

ஆடி ஓடிய
ஆற்றுப் படுகையில்
மணலைக் காணோம்.

ஒருமுறை
பெய்த மழையில்
கரையைக் காணோம்.

வாய்க்கால் நீரில்
உருகி நிற்கும்
ஒற்றைக் கால்
கொக்கைக் காணோம்.

மார்கழி மாசக்
கடைசிக் குளிரும்
சூடாய் தெரியும்
மனது
கண்ணீர் துளிர்க்க
வானம் பார்க்கும் விவசாயி
வாசலைத் தட்டுமே
வட்டிப் பிசாசு பெரிசாகி.

தை
பொங்க வருகிறது
குமறி.