> >

Tuesday, January 22, 2008

பிச்சை

ஓ வானமே
உன் நீலநிற
புடவையின்
ஓரத்தை கிழித்துத்தா.
இங்கே
பூமியில்
ஜனநாயகத்தாய்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்.

Tuesday, January 15, 2008

வாழ்கிறதா? காதல்

மயிழிறகின்
வருடலாய்
என் மனதில் பூக்கும்
உன் வருகையால்
மகிழ்ச்சி.

ஆயிரம்
வார்த்தைகளுக்கு சமம்
என் மௌனம்
கலைத்த
உன்
ஒரு புன்னகை.

என்
கரம் பற்றி நடந்த
வேளைகளில்
தேவலோகம்
உன் கண்களில்.

ஏமாந்த நிமிடங்கள்
எத்தனை தெரியுமா?
உன் குரலொழிக்கும்
சலங்கை ஒலிக்கும்
வித்தியாசம் தெரியாமல்.

முட்பாதையில்
பயணம்
முடிவில்
முல்லை ரதம் என்றாய்.

காத்திருந்து காத்திருந்து
கரைந்து போனது
காலம்
கண்விழித்து கண் விழித்து
கவலை நோயானது
வாழ்வு.

வார்த்தைக்கு
வேண்டும் சத்தியம்
உன்னிடம் எதிர்பார்த்தவன்
பைத்தியம்
உன் வாழ்விற்கு
இதுவா முக்கியம்.

காதல்
சொல்லரங்கில்
உன் செவிகளில் உணவு
என் மனதினில்பசி
நீ
முல்லைரதம் ஏறி
எனக்கு
முட்களை பரிசளித்தாய்

பாழும் மனதில்
ஆசிட் தெளித்த
பின்பும்
வளர்கிறதே
நெருஞ்சி முள்.

சுவாசிக்க நினைத்தது
என் தவறோ
நீரின் உள்ளே.

நீந்த நினைத்தது
என் தவறோ
நெருப்பின் உள்ளே.

அழகை ஆராதித்ததும்
என் தவறோ
ஆபத்தின் உள்ளே.

காதல்தான்
வாழ்கிறது
காதலர்கள்.........?

Saturday, January 12, 2008

பொங்கல்

வைகறை வெயில்
பூமி வெடிப்பு
வயல்
வளர்த்த நாற்றில்.

மஞ்சள் செடிகள்
பூத்த வரப்பில்
நெருஞ்சி முட்கள்.

ஆடி ஓடிய
ஆற்றுப் படுகையில்
மணலைக் காணோம்.

ஒருமுறை
பெய்த மழையில்
கரையைக் காணோம்.

வாய்க்கால் நீரில்
உருகி நிற்கும்
ஒற்றைக் கால்
கொக்கைக் காணோம்.

மார்கழி மாசக்
கடைசிக் குளிரும்
சூடாய் தெரியும்
மனது
கண்ணீர் துளிர்க்க
வானம் பார்க்கும் விவசாயி
வாசலைத் தட்டுமே
வட்டிப் பிசாசு பெரிசாகி.

தை
பொங்க வருகிறது
குமறி.